பக்கம்:ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு.pdf/158

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழர் வாழ்க்கை கி.மு. 500 முதல் கி.பி. 1 வரை

141


வாரார் ஆயினோ நன்றுமன்; தில்ல:
உயர்வரை அடுக்கத்து ஒளிருபு மின்னிப்
பெயல்கால் மயங்கிய பொழுதுகழி பானாள்
திருமணி அரவு தேர்ந்து உழல
உருமுச் சிவந்து எறியும் ஓங்குவரை யாறே"
                            - நற்றிணை : 255

மலைநாட்டு மகளிரின் கடமைகளுள் ஒன்று, தினை, கதிர் முற்றும் பருவத்தில் அத்தினைப்புனத்தைக் காத்தல் ஆகும். அதனால்தான், தங்கள் காதலர்களை எளிதில் சந்திக்கும் வாய்ப்பு அம்மகளிர்களுக்குக் கிடைத்துவிடுகிறது. தினை முற்றி அறுவடைப்பருவம் வந்துற்றதும், இம்மகளிர் வீடுகளுக்கு அனுப்பப்பட்டுப் புறம் போகவிடாது காக்கப்படுவர். இது, இற்செறிப்பு எனப்படும். அவ்வாறு இற்செறிக்கப்பட்டாள் ஓர் இளம்பெண்ணின் தோழி இவ்வாறு புலம்புகிறாள்: தோழி! தினையின் கதிர்கள் எல்லாம், விரிந்த அலைகளையுடைய கடல் வற்றிவிட்டாற் போலக், காய்ந்து கொய்யும் பருவம் அடைந்து விட்டன; அந்நிலையை நீ காண்பாயாக; இனி, நமர், அவற்றைக் கொய்துகொண்டு போவதல்லாமல், உன்னை வீட்டில் இட்டு வெளியே போகாவண்ணம் காப்பதும் செய்துவிடுவர் அது உறுதி. பொன் போலும் நிறம் வாய்ந்த மலர்களால் நிறைந்த வேங்கை மரங்கள் வளர்ந்து மணம் நாறும் மலைச்சாரலில், பெரிய மலைநாட்டுக்கு உரியோனாகிய காதலனோடு, தினைப்புனத்தில் தங்கியும் சிவந்த வாய்களை உடையவாகிய கிளிகளைத், தினைக்கதிர்களைக் கொய்து செல்லாவாறு. ஓட்டியும், அடுத்திருக்கும் கரிய மலைச்சாரலில் உள்ள அருவியில் நீர் விளையாடல் புரிந்தும், மலைச்சாரலில் வளர்ந்து நிற்கும் சந்தன மரத்தாலான சாந்தை அதன் மணம் - அறிந்து வண்டுகள் வந்து மொய்க்க மேனியெல்லாம் பூசிக்கொண்டும், பெரிதும் விரும்பி மேற்கொண்ட அந்நட்பு, மெல்ல மெல்லச் சிறுகி, முடிவில் அதுதானும் இல்லாவாறு போய்விட்டது போலும் ஒரு காட்சியை நான் மனக்கண் ணால் காணுகின்றேன். அதுகுறித்து நாம் என்னதான் செய்ய இயலும்?