பக்கம்:ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு.pdf/172

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழர் வாழ்க்கை கி.மு. 500 முதல் கி.பி. 1 வரை

167


நடப்பட்டிருக்கக்கூடும். அங்ஙனம் இல்லை என்றால், அவன் ஆலமர் செல்வனாக ஆகியிருக்க முடியாது. மருதம், இலந்தை, நாவல் போலும் மரத்தடிகளிலும், லிங்கம் வைக்கப்பட்டது. சிவ வழிபாடு பெருகி, அம்மரங்களை உள்ளடக்கிச் சிவன் கோயில்கள் கட்டத் தொடங்கிய ஐந்தாம் நூற்றாண்டிற்குப் பிறகு, அவையெல்லாம் புகழ் பெற்ற வழிபாட்டிடங்களாகி விட்டன. இப்போது தென்னாட்டில், மிகவும் புகழ் பெற்று விளங்கும் சிவன் கோயில்களில், இவையும் இடம் பெற்றுள்ளன. புனித மரங்களிலிருந்து வெட்டப்பட்டு, இம்மரம், அம்மரத்தடி லிங்க வடிவம் ஆகிய இரண்டின் இறைத்தன்மையும் கொண்டுவிட்ட கோயில் குடில்களில் நடப்பட்டு, கந்து எனப்படும் அக்கழிகளும், லிங்கமாகக் கருதியே நடப்பட்டிருக்கக் கூடும்.

நகரங்களின் தோற்றம்

ஒரு நிலத்துப் பண்டங்களைப் பிற நிலங்களின் பண்டங்களுக்கு விலையாகப் பண்டமாற்றம் செய்து கொண்டதன் விளைவாகவே, தொடக்கத்தில் நகரங்கள் தோன்றலாயின. கடற்கரை நாட்டின் பொருளாம் உப்பு, ஏனைய நாடுகளில், இன்றியமையாப் பொருளாகிவிட்டது. அதனால் நனிமிகப் பழங்காலத்திலிருந்தே, உப்பைச் சில சமயம் உலர்ந்த மீனையும் ஏற்றிக் கொண்ட, தள்ளாடித்தள்ளாடிச் செல்லும் கட்டை வண்டிகளின் வரிசை, மண் சாலைகளைக் கடந்து, மலை நாட்டின் அடிவரைக்கண்ணதான உள்நாடுகளுக்குச் செல்லலாயின. உப்பு வண்டிகளும், உப்பு வணிகரும் புலவர்களால், அடிக்கடி கூறப்பட்டனர். "குன்றின் மீது தோன்றும் உப்பு வணிகர் தலைவன்", "குன்றில் தோன்றும் குலவுமணல் சேர்ப்ப" (அகம் : 310:10) (குறிப்பு : 'குலவுமணல்" என்ற தொடரைக் குவ, உமணர்" எனச் சொற்சிதைவு செய்து அவ்வாறு பொருள் கொண்டுள்ளார். அது தவறு. குன்றுபோல் தோன்றும், மணல்மேடுகள் நிறைந்த கடற்கரை, தலைவனே என்பதுதான் அத்தொடர் உணர்த்தும் பொருளாகும். அதே அகத்தில், பாலையில் பயணம் கொண்ட உப்பு வணிகர், ஆங்கே மூன்று கற்களால் செய்து கொண்ட