பக்கம்:ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு.pdf/195

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

190

தமிழர் பண்பாடு



பெருங்கூட்டம் ஒன்றிற்குத் தலைமை தாங்கிச் சென்றார். அதன் விளைவாக நிகழ்ந்த சண்டையில், தலைமை அர்ச்சகர்கள் வெட்டித் தள்ளப்பட்டனர். தெய்வத் திருமேனிகள் உடைத்து நொறுக்கப்பட்டன. கோயில்கள் - இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டன. அவை நின்ற இடங்களில் மாதா கோயில்கள், கட்டப்பட்டு, சிலுவைகள் நிறுவப்பட்டன. ஆங்குக் குடிவாழ்ந்தவர்களில், ஐயாயிரத்துக்கும் மேற்பட்டவர் கிறிஸ்தவராக மதம் மாறிவிட்டனர். தம் சமயக் கோட்பாட்டைக் கைவிடாமல் விடாப்பிடியாக இருந்த அர்ச்சகர்களின் மக்கள் நானூற்று முப்பத்தெட்டுப் பேரும், கோயில் பணியாளர்களும், மொட்டை அடிக்கப் பட்டு, தொலைநாடுகளுக்குத் துரத்தப்பட்டு விட்டனர். (J. R. A. S. 1904; Page : 309 - 314. Kennedy)

தூரக்கிழக்கு நாடுகள் உடனான தென்னிந்தியக் கடல் வாணிகம், இன்றும் தொடர்ந்து நடைபெற்றுவரும் மக்கள் குடி பெயர்ச்சியின் தொடக்கத்திற்கு வழிவகுத்தது. படைத்துணைத்தலைவர், திருவாளர் கெரினி (Gerine) அவர்கள், கிறித்துவ ஆண்டு தொடக்கத்திற்குப் பல், நூற்றாண்டுகளுக்கு முன்பே, வட இந்தியாவிலிருந்தும், தென் இந்தியாவிலிருந்தும், வணிகர்களும் புதிது காணும் உள்ளஆர்வம் மிக்கவர்களுமான இப்பெரும் வெள்ளம், இந்தோ சீனாவுள் பாயத் தொடங்கி, நிலவழியாக, வர்மா மூலம், அத்தீவகற்பத்தின் வடபகுதியையும், கடல்வழியாக, அதன் தென் கடற்பகுதியையும் அடைந்து, ஆங்கே, தங்கள் குடியிருப்புகளையும், வணிகநிலையங்களையும் நிறுவின” என்று கூறியுள்ளார். [J. R. A. S. 1904. p. 234 - 37) பழைய இந்தியர்களின் இந்நடமாட்டம் குறித்த விரிவான விளக்கத்திற்கு, மேலே கூறியதைக் காண்க.) பிராமணர்களும் பௌத்தர்களுமாகிய ஆரியர், பண்டைய இந்திய நாகரீகத்தையும், தமிழர், வாணிகத்தையும் இங்குக் கொண்டு சென்றனர். சுவர்ண பூமியின் எல்லைக்கு அப்பால், பண்டைக்காலத்தில் பெரிய வணிக மையமாக விளங்கிய மார்தான் (Martaban) எனும் இடத்திற்கு அணித்தாகத்,