பக்கம்:ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு.pdf/222

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மக்கள் வாழ்க்கை ....

217


பெருமழையால் ஈரப்பக்குவப்பட்ட நிலத்தைக், கீழ்மண் மேல்மண்ணாகி நன்கு புழுதிபடுமாறு பலசால் உழுது, விதைத்து, முளைத்து இளம்பயிராக இருக்கும் போது, காற்று உள் நுழைய வழி செய்யவும், வருத்தமின்றிக் களை அகற்றவும், பயிர் நன்கு தழைப்பதற்கு இடம் தருமாறு, நிலத்து இறுக்கத்தை நெகிழ்விக்கவும் தாளி அடித்து, அது செய்ததன் பயனாய், பயிர் நன்கு செழித்து வளர்ந்திருக்கும் போது களை அகற்றிவிடவே இலைகள் தழைத்துப் பெருகி, அண்மையில் முட்டை இட்ட பெண்மயிலின் அழகிய தோகை போலும் தோற்றம் வாய்ந்த கரிய தண்டுகள் நீண்டு, ஒரு சேரக் கதிர்விட்டு, கதிர்களின் அடியிலும், நுனியிலும் உள்ள மணிகள் ஒருசேர முற்றிக் காய்த்த வரகை அறுக்கவும், தினையைக் கொய்யவும், எள் கறுத்து எள்ளினங்காய் முற்றவும், வளமான கொடிகளில் வெள்ளவரைக் கொத்து, கொய்யும் நிலை எய்த, நிலத்தில் புதைத்துப் புளிப்பேறப் பண்ணிய மதுவைப் புல் வேய்ந்த சிறிய குடிசைகளில் அனைவர்க்கும் வழங்க, கொதிக்கும் நறு நெய்யில் வறுகடலை துள்ள, சோறு ஆக்கி முடிக்கும் அரிய காட்சி ஒரு பாட்டில் விளக்கப்பட்டுளது.

"வெப்புள் விளைந்த வேங்கைச் செஞ்சுவல்
கார்ப்பெயல் கலித்த பெரும்பாட்டு ஈரத்துப்
பூழி மயங்கப் பல உழுது, வித்திப்,
பல்லி ஆடிய, பல்கிளைச் செவ்விக்
களைகால் கழாலின், தோள்தொலிபு நந்தி,
பெண்மயில் புனிற்றுப் பெடை கடுப்ப நீடிக்,
கருந்தாள் போகி, ஒருங்கு பீள் விரிந்து,
கீழும் மேலும் எஞ்சாமைப் பலகாய்த்து,
வாலிதின் விளைந்த புதுவரகு அரியத்
தினை கொய்யாக், கவ்வை கறுப்ப, அவரைக்
கொழுங்கொடி விளரிக்காய் கோட்பத மாசு,
நிலம் புதைப், பழுனிய மட்டின் தேறல்
புல்வேய் குரம்பைக் குடிதொறும் பகர்ந்து,
நறுநெய்க் கடலை இசைப்பச் சோறு அட்டு"
                                புறம் : 120 : 1-74