பக்கம்:ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு.pdf/235

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

230

தமிழர் பண்பாடு


இவற்றிற்கெல்லாம் காரணமான கார்காலம் தொடங்கி விட்டது. பெண்மான், மருண்டு மருண்டு விழிக்கும் அழகிய கண்களை உடையவாய தன் குட்டிகளோடு களர்நிலம் நோக்கி ஓடி விடவே, அவற்றின்பால் கொண்ட ஆருாக்காதல் நெஞ்சோடு, அவற்றைத் தேடி அலையும் ஆண்மான் அதோ விரைகிறது; காண்பாயாக.'’

"இலையில் பிடவம் ஈர்மலர் அரும்பப்,
புதல் இவர் தளவம் பூங்கொடி அவிழப்
பொன் எனக் கொன்றை மலர, மணிஎனப்
பன்மலர்க் காயா குறுஞ்சினை கஞலக்,
கார் தொடங் கின்றே காலை......
........................
கழிப் பெயர் களரில் போகிய மடமான்
விழிக்கண் பேதையொடு இனன் இருந்து ஓடக்
காமர் நெஞ்சமொடு அகலாத்
தேடூஉ நின்ற இரலை ஏறே”
                 - நற்றிணை : 1 - 15 : 6 - 10

கேட்க இனிப்பன, முல்லைக்காட்டு ஒலிகள், “தேனடைகள் கட்டப்பெற்றிருக்கும் நெடிய முடிகளையுடைய மலைச்சாரலில் குவிந்த இலைகளை நெருங்கக் கொண்ட முசுண்டையில், வானத்தில் விளங்கும் மீன் கூட்டம் போலக் 'காட்சி தருமாறு, வெண்ணிறப் பூக்கள் பூத்துக் குலுங்கும் நள்ளிரவின் நடுயாமத்தில், ஆட்டுக் குட்டிகளை, மழை மறைக்கும் ஓலைப் பாயை முதுகில் கொண்டவாறே, ஒரு சேரக்கொண்டு காத்துக்கிடக்கும் இடையன், இனிய மணம் கமழும் முல்லை ‘ மலர்களைத் தோன்றிப் பூக்களோடு, வண்டுகள் வந்து மொய்க்குமாறு தொடுத்த மாலையை, அதினின்றும் நீர்த் துளிகள் ஓழுக, தலையில் அணிந்து கொண்டு, குளிர் போக்க, எழுப்பிய சிறு தீயில் தன் உள்ளங்கைகளைக் காய வைத்துக்கொண்டே, ஆட்டு மறிகளை விரட்டுவான் வேண்டி எழுப்பும் நீண்ட ஒலி, தினைப்புனத்தை அழிக்கவரும் சிறிய கண்களை உடைய பன்றியின் பெருங்கூட்டத்தை விரட்டுவான் வேண்டி,