பக்கம்:ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு.pdf/238

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மக்கள் வாழ்க்கை ....

233


கொடியை உடைய ஆம்பலின், நீர் குறைய நீர் மட்டத்துக்கு மேல் உயர்ந்து சுருண்டிருக்கும் இலை, அசைந்து அசைந்து வரும் வாடைக்காற்று வீசுந்தொறும், விரிந்து அடங்கும் காட்சிக்குக் கொல்லன் உலைக்களத்தில் காற்று அடிக்க விசைத்து இழுத்துவிடும் துருத்தியை உவமை காட்டியுள்ளார் ஒரு புலவர்"

"'பழனப் பொய்கை அடைகரைப் பிரம்பின்
அரவாய் அன்ன அம்முள் நெடுங்கொடி
அருவி ஆம்பல் அகலடை துடக்கி,
அசைவரல் வாடை தூக்கலின், ஊதுலை
விசைவாங்கு தோலின் வீங்குபு ஞெகிழும்"
                    - அகம் : 96 : 3-7

தீ ஓங்கி எரிந்து அடங்கிய நிலையில், நெய்யில் பக்குவப் பட்டு மிதக்கும் இறைச்சித் துண்டுகளுக்குப் பருத்தி நூற்கும் பெண், கொட்டை நீக்கி அடித்துக்குவித்து வைத்திருக்கும் பருத்திக் குவியல்களை உவமையாக்கியுள்ளார் ஒரு புலவர்,

"பருத்திப் பெண்டின் பனுவல் அன்ன
நெருப்புச் சினம் தணிந்த நிணம் தயங்கு கொழும்குறை".
                             -புறம் : 125 : 1-2

இரட்டை இரட்டையாகக் கவைத்த கதிர்களைக் குற்றிப் புடைத்து எடுத்த வரகரிச்சோற்றையும், கால்நடைச் சாணங்களால் ஆன எரு குவிந்து கிடக்கும் தெருவில், காலத்தே விளைந்திருக்கும் வேளையின் வெண்பூக்களை, வெள்ளிய தயிரில் மிதக்க விட்டு ஆய்ச்சியர் ஆக்கிய புளிக் குழம்பயும் வயிறார உண்டு அவரைக் காய்களைக் கொய்யும் தொழிலாளியைப் படம்பிடித்துள்ளார் ஒரு புலவர்.

"கவைக்கதிர் வரகின் அவைப்புறு ஆக்கல்,
தாதெரு மறுகில் போதொடு பொதுளிய
வேளை வெண்பூ வெண்தயிர்க் கொளீஇ
ஆய்மகள் அட்ட அம்புளி மிதவை
அவரை கொய்யுநர் ஆர மாந்தும்"
                    புறம் : 215 :1-5