பக்கம்:ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு.pdf/240

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மக்கள் வாழ்க்கை ....

235


கொள்ள வருக' என அறிவித்துச் செல்லும் அறிவால் முதிர்ந்த குயவனே. ஆம்பல் நெருங்க வளருமளவு வளம்மிக்க வயல்களையும், பொய்கையையும் உடைய ஊருக்கு, விழா அறிவிக்கச் செல்லுவையாயின், அவ்வூர் மகளிரை, 'கூரிய பற்களும் அகன்ற அல்குலும் உடையீர்' என அவர் நலம் பாராட்டி அழைத்து, 'தெறித்து இசை எழுப்புவதற்கு ஏற்புடைய நரம்பு கட்டிய யாழில் பாடத்தகும் பாடல்களை இனிதாக இசைக்கவல்ல உங்களுர்ப் பாணன் செய்யும் துன்பங்களுக்குக் கணக்கில; அவன் உரைப்பன எல்லாம் மெய்யே போல் தோன்றினும், அனைத்தும் பொய்யே; பொய்யை மூடி மறைத்து மெய்யே போல் கூறுவதில் வல்லவன் அப்பாணன். ஆகவே அவன் கூறுவதில் பெரிதும் விழிப்பாய் இருப்பீர்களாக என இதையும் அறிவித்துவர இயலுமோ? அறிவித்து வர வேண்டுகிறேன் எனப் பெண் ஒருத்தி, குயவனைப் பார்த்துக் கூறியதாக ஒரு செய்யுள் :

"கண்ணி கட்டிய கதிர அன்ன
ஒண்குரல் நொச்சித் தெரியல் சூடி,
ஆறுகிடந் தன்ன அகல்நெடும் தெருவில்,
சாறுஎன நுவலும் முதுவாய் குயவ!
இதுவும் ஆங்கண் நுவன்றிசின் மாதோ!
ஆம்பல் அமன்ற தீம்பெரும் பழனத்துப்
பொய்கை ஊர்க்குப் போவோ யாகிக்,
கைகவர் நரம்பின் பனுவல் பாணன்
செய்த அல்லல் பல்குவ; வை எயிற்று
ஐது அகல் அல்குல் மகளிர்! இவன்
பொய்பொதி கொடுஞ்சொல் ஓம்புமின் எனவே..
                              - நற்றிணை : 200

குயவன், ஒருவகையில் கோயில் பூசாரியாகவும் இருந்து பலி கொடுப்பதும் செய்வன். பழமையும் வெற்றிச் சிறப்பும் வாய்ந்த மூதூரில் பரந்து அகன்ற ஊர் மன்றத்தில், விழாத் தொடங்குவதற்கு முன்னர், நீல மணி போலும் மலர்க் கொத்துக்களை உடைய நொச்சிமாலை அணிந்த , உருவாலும், உள் அறிவாலும் மூத்த குயவன், தான் இடும்பலியை