பக்கம்:ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு.pdf/242

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மக்கள் வாழ்க்கை ....

259


பாறையில் தினை உலர்த்திக் காத்திருக்கும் ஒரு பெண்ணைப் பாடியுள்ளார் ஒரு புலவர். முன்கை நிறைய வளையல்களையும், பிற உடல் உறுப்புகளில் அவற்றிற்கு உரிய அணிகளையும் அணிந்திருக்கும் உயர்குடி மகளிர், கரிய பெரிய மலை மீது அகன்ற பாறையில் செந்தினை பரப்பிக் காத்து நிற்கின்றனர்.

"நிறைவளை முன்கை, நேரிழை மகளிர்
இருங்கல் வியல் அறைச் செந்தினை பரப்பி"
- குறுந்தொகை : 335: 1-2.

காய்ச்சிய பாலில் மோர் இட்டுத் தயிர் ஆக்குவதும் ஓர் உவமையாகக் கூறப்பட்டுளது. "பெண்மைக்குரிய மடப்பம் உடையளாய ஆய்மகள், தன்கை விரல் முனையால் தொட்டுத் தெறித்த சிறிதளவே ஆன மோர், குடம் நிறைய இருந்த பாலனைத்தையும் தயிராக்கும் நிகழ்ச்சி, களம் புகுந்த ஒரு பெருவீரன் அக்களத்தில் நிறைந்து நிற்கும் நாற்படை அனைத்துக்கும் உயிர் போக்கும் நோயாகி நிற்கும் தன்மைக்கு உவமையாகக் கூறப்பட்டுளது.

"மடப்பால் ஆய்மகள் வள்ளுகிர்த் தெறித்த
குடப்பால் சில்லுறை போலப்
படைக்கு நோய் எல்லாம் தான் ஆயினனே"
                    - புறம் : 276 :3-5

கடுகு மிளகு முதலாம் தாளிப்புப் பொருட்களைக் கலந்து உணவிற்கு மணம் ஊட்டுவதும் கூறப்பட்டுள்ளது. குய்க்கொள் கொழுந்துவை' (புறம் : 160 : 1) குய்யுடை அடிசில்" (புறம்: 127 : 7)

சிறுவர் சிறுமியரின் ஆடல் பாடல் போலும் இனிய பொழுதுபோக்குகள் பற்பல இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. தச்சன் செய்து கொடுத்த சிறிய குதிரை பூட்டப்பட்ட சிறிய தேரில் அமர்ந்து சென்று இன்புறல் இயலாது எனினும், அதைக் கயிறு கொண்டு ஈர்த்துச் சென்று இன்பம் அடையும் சிறுவர் சிறுமியரின் இன்ப விளையாட்டில் இன்பம் கண்டுள்ளார் ஒரு புலவர்.