பக்கம்:ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு.pdf/245

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

240

தமிழர் பண்பாடு


"ஒள்ளிழை மகளிரொடு ஓரையும் ஆடாய்” (நற்றிணை 68:1-3, 155:1) “ஓரை ஆயத்து ஒண்டொடி மகளிர்” (புறம் : 176 : 1)

மகளிரின் மற்றொரு விளையாட்டு "அல்லியம்.” ஆண் கோலமும் பெண் கோலமும் உடையவாக இரண்டு பாவைகளைச் செய்து கொண்டு ஆடும் ஒருவகை விளையாட்டு.

"வல்லோன் தைஇய வரி வனப்பு உற்ற
அல்லிப் பாவை ஆடுவனப்பு ஏய்ப்பக்
காம இருவர்”.
          புறம் : 33 : 16 - 18


குருட்டு நம்பிக்கைகள்


இனி, மக்களிடையே நிலவியிருந்த குருட்டு நம்பிக்கைகள் சில. காக்கை கரைந்தால், விருந்து வரும் என்ற நம்பிக்கை, இன்றேபோல் அன்றும் இருந்தது. “கணவன் பிரிவாற்றாத் துன்பக் கவலையால் மெலிந்துவிட்ட என் தோழியின் தோள்கள், அம்மெலிவு நீங்கிப் பண்டே போல் ஆகிச் சிறப்புறுவதற்குத் துணை செய்யும் வகையில், கணவன் வருகையைக் கரைந்து முன் அறிவித்தது காக்கை; அந்நல்லது செய்த காக்கைக்கு இடும் பலியாகத் தொண்டி. நகரத்து வயல்களில் முற்ற விளைந்த வெண்ணெல் அரிசி கொண்டு சுடுசோற்றைத் திண்ணிய தேருக்கு உரிய நள்ளி என்னும் கொடைவள்ளலின் காட்டில் வாழும் ஆயர்களின் பல பசுக்களிடம் கொண்ட நெய்யைக் கலந்து, ஏழு கலத்தில் இட்டு வைத்தாலும், அது செய்த நன்றியை நோக்க, இப்பலி சிறிதாம்” எனக் கூறுகிறாள் தலைவியின் தோழி ஒருத்தி.

"திண்தேர் நள்ளி கானத்து அண்டர்
பல்லா பயந்த நெய்யில், தொண்டி
முழுதுடன் விளைந்த வெண்ணெல் வெஞ்சோறு
எழுகலத்து ஏந்தினும் சிறிது; என் தோழி
பெருந்தோள் நெகிழ்த்த செல்லற்கு
விருந்துவரக் கரைந்த காக்கையது பலியே'’
                   - குறுந்தொகை : 270