பக்கம்:ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு.pdf/248

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மக்கள் வாழ்க்கை ....

243


தமிழர் நாகரீகம் (Pre Aryan Tamil Culture) என்ற என்னுடைய நூலிலும் விளக்கப்பட்டுள்ளன. ஆங்கே எடுத்துக்காட்டிய கடவுள்களே அல்லாமல், வேறு கடவுள்களையும் தமிழர் வழிபட்டனர். திங்கள், அவற்றின் ஒன்று. கடல் நடுவே, மீன் பிடி படகுகளாம் திமில்களில் ஏற்றப்பட்டுக் காட்சி அளிக்கும் விளக்குகள் போல, செம்மீன்கள் ஒளிவிடும் விசும்பின் உச்சிக்கண், முழுமதி நாளன்று, அம் முழுமதியைக் கண்டு, காட்டுவாழ் மயில் போன்ற, சில வளையல்கள் அணிந்த வளாய் என் விறலியும் நானும் அம்முழுமதி, வளவன் வெண் கொற்றக்குடை போன்றுளது என எண்ணியவாறே தொழுதோம் அல்லவோ? என்ற புலவர் வினாவில், மதி வழிபாடு குறிப்பிடப்பட்டுளது.

"முந்நீர் நாப்பண் திமில்சுடர் போலச்
செம்மீன் இமைக்கும் மாக விசும்பின்
உச்சி நின்ற உவவுமதி கண்டு
கட்சி மஞ்ஞையின் சுரமுதல் சேர்ந்த
சில்வளை விறலியும் யானும் வல்விரைந்து
தொழுதனம் அல்லமோ? ...........
வளவன் ..........
மாலை வெண்குடை ஒக்குமால் எனவே".
                  புறம் : 60


("மாக விசும்பு" எனும் இத்தொடர், புறம் : 35, 60, 270, 400, அகம் : 253, மதுரைக்காஞ்சி : 454; பரிபாடல் 47 ஆகிய பல இடங்களில் வந்திருந்தாலும், உரையாசிரியர்கள் அதற்கான தெளிவான பொருளை உணர்த்தினாரல்லர்).

காக்கைக்கு உணவு அளித்தல், ஒவ்வொரு வீட்டிலும், நாள்தோறும் தவறாமல் நடைபெறும் ஒரு சமயச் சடங்கு. "கதிர்கள் எறித்தலால் நடப்பார் கால்களை வெப்பம். பண்ணுமாறு ஞாயிறு காயும் பகற்பொழுதில், நகரில் உள்ள பெரிய மாளிகைகளுக்கு வரும் விருந்தினர்களை வரவேற்று உணவளித்து ஓம்புவான் வேண்டி, பொற்றொடி அணிந்த அம்மாளிகை வாழ் மகளிர், விருந்தினர்க்கு உணவு படைப்பதன் முன்னர், மாளிகையின் முற்றத்தில் பலியாகப்