பக்கம்:ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு.pdf/268

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மக்கள் வாழ்க்கை ...

263


கடற்கரைத் துறைமுகங்கள் கிறித்துவ ஊழியின் தொடக்கத்தில், உரோமாபுரியோடு நடைபெற்ற வாணிகத்தில் மிகப்பெரிய வளர்ச்சியோடு, கடற்கரை நகரங்களும் மிகவும், முக்கியத்துவம் உடையதாக உயர்ந்துவிட்டன. அவ்வாறே இலக்கியங்களிலும் குறிப்பிடப் பட்டுள்ளன. கிழக்குக் கடற்கரையில் வடகோடியில் குறிப்பிடக்கூடியது, பிற்காலத்தில் மல்லை என்றும், மேலும் பிற்பட்ட காலத்தில் மகாபலிபுரம் என்றும் அழைக்கப் பட்டதான மாவிலங்கைத் துறைமுகமாம். விளையாடும் கூட்டமாகிய சிறந்த தொடி அணிந்த மகளிர், பன்றிகள் உழுது சேறாக்கிய மண்ணைக் கிளறினால் அதன் கண் புலால் நாறும் ஆமை முட்டைகளையும், தேன் நாறும் ஆம்பல் கிழங்குகளையும் பெறும் மண்வளமும், இழும் எனும் ஒலி ஓயாது ஒலிக்குமாறு நீரை வெளிப்படுத்திக் கொண்டே யிருக்கம் மதகுகளைக் கொண்ட நீர்வளமும் உடைய பெருமைமிக்க மாவிலங்கை".

ஓரை ஆயத்த ஒண்தொடி மகளிர்
கேழல் உழுத இருஞ்சேறு கிளைப்பின்,
யாமை ஈன்ற புலவுநாறு முட்டையைத்
தேன் நாறு ஆம்பல் கிழங்கொடு பெறூஉம்
இழும் என ஒலிக்கும் புனலம் புதவின்
பெருமா விலங்கை "
    -புறம் : 176 : 1-6

இத்துறைமுகம் மற்றுமோர் இடத்தில், மணம் நாறும் மலர்களையுடைய சுரபுன்னை , அகில், சந்தனம் ஆகிய மரங்களை நீராடும் துறையில் நீராடும் மகளிர்களின் தோள்களுக்குத் தெப்பம் ஆகித் துணைபுரியுமாறு, கரைகளைக் குத்தி அழிக்கும் பெருவெள்ளம் அடித்துக் கொண்டுவந்து தரும் ஆற்றுவளம் மிக்கதும், அழிக்கலாகா ஆற்றல் வாய்ந்த தொல்பெரும் நகராம் இலங்கையின் பெயரைத் தான் தோன்றிய போதே பெற்றதுமாகிய மாவிலங்கை" எனக் கூறப்பட்டுள்ளது.

நறுவீ நாகமும், அகிலும், ஆரமும்
துறையொடு மகளிர்க்குத் தோள் புணை ஆகிய