பக்கம்:ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

24

தமிழர் பண்பாடு

காட்டில் கால்நடைகளின் ஓய்வுநிலை அளித்த அமைதி வாழ்க்கை , குழல் எனும் இசைக்கருவியைக் காண வழிவகுத்தது. நீளவாட்டில் ஒரு சில துளைகள் இடப்பட்ட சிறுமூங்கில் துண்டே குழல். கால்நடைகள் மேய்ந்து கொண்டிருக்க, நீண்ட நெடுநேரம் காத்திருப்பதால் ஏற்படும் ஆயரின் மனச்சோர்வைப் போக்கவல்ல இனிய இசை அதினின்றும் எழும்.

ஆயர்களின் ஒரு பிரிவினராகிய குறும்பர் என்பார், ஆடுகளில் குறுகிய கால்களும் உடல் முழுவதும் அடர்ந்து நீண்ட மயிரும் உடைய இனமாம் குறும்பாடுகளை வளர்த்து வந்தனர். முல்லை நிலத்தில், இன்று நீராவி இயந்திரங்கள் கட்டுப்பாடின்றி நிறுவப்பட்டு, விசைத்தறிகள் மூலம் கம்பளி நெய்யப்படுதல், ஏனைய கைவினைஞர்களைப் போலவே, குறும்பர்களின் அன்றாட வாழ்க்கைக்காம் உணவினைப் பெறும் ஆண்டாண்டு கால வழிமுறையினை இழக்கச் செய்துவிட்டது. என்றாலும், குறும்பர், தங்கள் ஆடுகள் அளிக்கும் மயிரிலிருந்து கம்பளி நெய்யக் கற்றிருந்தனர். சென்னை மாநிலத்தின் முல்லைப்பகுதிகளில் இன்றும் குடிவாழ்ந்து கொண்டு தங்கள் இனம் வழிவழி மேற்கொண்டு வந்த குலத்தொழிலாம் கம்பளி நெசவை மேற் கொண்டுள்ளனர்.

மீனவர் இனம்

மக்கள், அடுத்துக் குடியேறிய இடம், கடலும் கடல் சார்ந்த இடமுமாகிய நெய்தல். உயிர்பெற்று விட்டது போல் ஓங்கி எழுந்து ஓய்ந்து அடங்கும் அலை ஓயாக்கடலின் பெருநீர்ப்பரப்பு, தாம் அளிக்கவல்ல பேரிடர்ப்பாடுகள் பால் காதல் கொண்டு, உண்டற்கினிய மீனாம், என்றும் குறையற்றுப் போகாத தன் பெரும் செல்வத்தை வாரிக் கொண்டு வரத்துணிந்து தொழில் படுமாறு பரந்த அகன்ற மார்பும் அழகுறச் செதுக்கி வைத்தாற்போலும் சதைப் பிடிப்பும் கொண்டு, வீரச்செயல் விரும்பும் மீனவர்களுக்கு அழைப்பு விடுத்தது. கடலோரத்தில் மீன் பிடிப்பதிலிருந்து மீன் பிடிக்க ஆழ்கடலுக்குச் சென்றனர். கடற்கரைச் சூழல்,