பக்கம்:ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

28

தமிழர் பண்பாடு


தொகைப் பெருக்கமும், உணவுப்பொருட்கள் இயல்பாகக் கிடைத்து வருவதில் நிகழும் மாற்றமும், பல்வேறு கால கட்டத்தில் மக்கள் ஒரு நிலப்பகுதியிலிருந்து மற்றொரு நிலப்பகுதிக்குக் குடிபெயர்ந்தமையும், அதைத் தொடர்ந்து, மாறிய வாழ்க்கைச் சூழ்நிலை வழங்கிய தூண்டுதல் உணர்ச்சிக்கு ஏற்ப, வேடர், நாடோடி, மேய்ப்பாளர், கடலோடி, உழவர் என்ற வேறு வேறுபட்ட மனித நாகரீக வளர்ச்சியையும், இப்பகுதியில் எவ்வாறு உருவாக்கிவிட்டன என்பதைப் புரிந்து கொள்வது எளிது. வேறு வகையில் கூறுவதாயின், உலகப் பெருநிலப்பரப்பில் வரையறுக்கப்பட்ட இச்சிறு பகுதியில் மனித வளர்ச்சி பற்றிய ஆய்வு மனித நாகரீக வளர்ச்சியில், நில இயல் கூறுபாடு செலுத்தும் ஆட்சியின் அளவைக் கணக்கிட்டு, வரைபடத்தில் காட்டுவதுபோல் தெளிவாக வரையறுத்துக் காட்டிவிடலாம். இந்த ஐந்து இயற்கைப் பிரிவுகள் மிகப் பரந்த அளவில் இடம் பெற்றுள்ளன.

உதாரணத்திற்கு, கார்ப்பேத்தியன் முதல், அல்டாய்ஸ் அடிவரையான பரந்து கிடக்கும் பெருநிலப்பரப்பில் முல்லைத்திணையும், பயரினிஸ் முதல் இமயமும் அதற்கு அப்பாலும் வரையான பெருமலைப்பகுதியில் உலக மாதாவின் இடையைச் சுற்றி அணியப்பட்டிருக்கும் ஒட்டி யாணம் என்ற அணிபோல் குறிஞ்சித் திணையும், மத்திய தரைக்கடல், இந்தியப் பெருங்கடல், அட்லாண்டிக் பெருங்கடல்களைச் சார்ந்த கடற்கரைப் பகுதிகளில் நெய்தல் திணையும், மிகப்பெரிய பாலைவனமாம் சகாராவும், அரேபியா, பர்ஷியா, மங்கோலியா நாடுகளில் அதன் தொடர்ச்சியுமாகிய பகுதியில் பாலைத் திணையும் இடம் பெற்றுள்ளன.

படிப்படியாகக் கடந்து வந்த நாகரீக வளர்ச்சி, முதன்முதலில் தென் இந்தியாவில் குறிப்பிட்ட ஒரு பகுதியில் தொடங்கி, அங்கிருந்து வெகு தொலைவிற்கு அப்பால் உள்ள பெரிய நிலப்பரப்பிற்கும் பரவிற்றா? அல்லது நிலையெதிர் மாறாக நிகழ்ந்ததா? இப்புதிர், இன்றைய நிலையில் விடுவிக்க மாட்டா ஒன்று என்றாலும் மக்கள் கூட்டம், ஒரு நிலப்பிரிவில்