பக்கம்:ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கி.மு. இரண்டாவது ஆயிரத்தாண்டில் தமிழர் நாகரீகம்

49


ஆறு, மலைகளில் குடிகொண்டிருக்கும் ஆவிகளைக் காட்டிலும் உயர்ந்த கடவுள்கள் நாட்டில் தோன்றி வளர்ந்து நின்றன. இக்கடவுள்கள், ஒவ்வொரு நிலப்பகுதியிலும், அவ்வந்நிலங்களின் நில இயல்புகளுக்கு ஏற்ப, தனித்தனியே தோன்றி வளர்ந்தன. மலைநாட்டுத் தெய்வம் செம்மேனிக் கடவுள், அதாவது சேயோன். அவன், புணர்ச்சிக்கு முந்திய தான களவுக்காதல் காவலனாம் முருகன் எனவும் அழைக்கப் பட்டான். அவனை வழிபடுவார், அவனுக்காகப் பலி கொடுத்த ஆட்டின் செங்குருதி கலந்த சோற்று உருண்டைகளை அவனுக்குப் படைத்தனர். அவன் ஒரு வேடுவன். வேல் ஏந்துவான். அதனால், வேலன் என அழைக்கப்பட்டான். அவனை வழிபடும் அர்ச்சகனாம் பூசாரியும் வேலன் என அழைக்கப்பட்டான். மகளிரிடையே, அவன், காதல் நோயைத் தோற்றுவிப்பான். மகளிர் அம் முருகனால் அலைக்கழிக்கப் படும்போது, வேலன், பெண்களின் காதல் நோய் தீர்க்க, மாயாஜால வழிபாட்டு முறைகளை மேற்கொள்வன். வேலன், முருகனோடு கலந்து தெய்வம் வரப்பெற்று அவனோடு உரையாடும் பொழுது, அவனும், தெய்வீக வெறிக்கு உள்ளாகி, வெறியாட்டம் எனப்படும் பேயாட்டம் ஆடுவதும் பாடுவதும் செய்வன். இவ்வெறியாட்டத்தில், மகளிரும் பங்கு கொள்வர். ஆடவர் அல்லது மகளிர் பூசாரிகள், கடவுள் ஏறி, அக்கடவுள் ஆட்சிக் கீழ் இருக்கும் போது ஆடுவதும், பாடுவதும் மட்டும் செய்வதில்லை. இருண்டு போன இறந்த காலத்தைப் படித்துக் .. காட்டுவர். எதிர்காலத்தே வருவது அறிந்து கூறுவர். எந்தப் பேய் எந்த நோயைத் தந்தது என நோய்க் காரணம் கண்டு கூறுவர். உடலையும் உள்ளத்தையும் உடைமையாகக் கொண்டுவிட்ட அனைத்து நோய்களையும் தீர்ப்பர். நோய் தீர்க்கும் முறை, தெய்வத்தன்மை மட்டுமே வாய்ந்தது அன்று, மலைநாடு, நோய் தீர்க்கும் மூலிகைகளைப் பெருமளவில் கொண்டது. ஆகவே, வேலன், தேவராட்டிகளின் வெறி யாடல் நிகழ்ச்சி, அம்மூலிகைகளாலும் அரண் செய்யப் பட்டது. ஆகவே, பழங்காலப் பூசாரி , மருத்துவனும் ஆவன். ஆயிரமாயிரம் சமயத் தத்துவங்கள் வளர்ந்து விட்டிருக்கும். இன்றும், பேய்களை வழிபடுவோரும், மருத்துவருமாக இணைந்த தாழ்த்தப்பட்ட இனத்தவராம் குறவர்,