பக்கம்:ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு.pdf/6

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
தமிழர் பண்பாடு
(தொடக்க காலம் முதல் கி.பி. 600 வரை)
1.முன்னுரை

வரலாற்றின் குறிக்கோள்

வீரத்தின் பெயரால் எண்ணற்ற மக்களைப் போர்க் களத்தில் கொன்று குவிப்பதன் விளைவாக, அரச இனங்களின் எழுச்சி வீழ்ச்சிகள் பற்றிய கதைகள், அமைதி வாழ்வு நடாத்தும் மக்கள், தங்கள் தளரா உழைப்பின் பயனாக ஈட்டிக் குவித்து வைத்திருக்கும் செல்வத்தைக் கொள்ளையடித்துக் கொள்ளும் வெறியோடு மிகப்பெரிய மக்கள் கூட்டம் உலக அரங்கில் இடம் பெயர்ந்து கொண்டேயிருக்கும் பழங்கதை, அரசகுல மகளிரின் கற்பழிப்பு, ஒரு சிலரின் வெறியாட்டத்தைப் பழி வாங்குவது காரணமாக ஏதுமறியா உயிர்களின் இரத்தப் பெருக்கெடுப்புகளின் விளக்கம் ஆகிய இவைதாம் வரலாறு என்றால் கி.பி 600 வரை குறிப்பிடத்தக்க வரலாற்று நிகழ்ச்சிகளே இல்லாத ஓர் இனிய நாடு தமிழ்நாடு எனலாம்.

இதற்கு மாறாகத் தங்கள் வாழிடங்களைச் சூழ உள்ள நிலக்கூறுபாடுகளின் தூண்டுதலாலும், வேறுவேறு பட்ட பண்பாடு, நாகரீகங்களை வளர்த்துக் கொண்டிருக்கும் பல்வேறு இனமக்களோடு கொண்ட தொடர்பு தந்த செல்வாக்குளின் தூண்டுதலாலும், ஓரின மக்களின் சமூக சமய வாழ்க்கையில், சிறுகச் சிறுக ஏற்பட்டுவிட்ட வளர்ச்சி நிலைகளின் மதிப்பீடு அம்மக்களின் உண்ணல் பருகல், விளையாட்டு, ஆடல், பாடல், அரசர்க்கும் கடவுளர்க்கும் ஆற்றும் வழிபாடு, ஆகிய இவைகளில் மெல்ல மெல்ல ஏற்பட்டுவிட்ட முன்னேற்றங்களின் விரிவான விளக்கம், அம்மக்களின் உள்நாட்டு வாணிகம், சேய்மை அண்மைக்கண்