பக்கம்:ஆர்மேனியன் சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அக்செல் பாகுன்ட்

45

கடற்கரையில் இருந்தாள். அவள் தனது சிறுகுடையின் நுனியினால் மணலில் கோடுகள் வரைவதும், பிறகு அவற்றை அழிப்பதுமாக இருந்தாள். அவன் தன் கையிலிருந்த காய்ந்த சுள்ளியைத் துண்டுதுண்டாக ஒடித்துக்கொண்டிருந்தான், அவர்களது பாதங்களில் நுரையை வீசியடித்த அலைகள் குச்சியின் துணுக்குகளைக் கடலுக்குள் இழுத்துச் சென்றன. கடற்கரையில் அவர்கள் அமர்ந்திருந்தபோது, அந்தப் பெண் அவனை மணந்து கொள்வதாக வாக்களித்தாள். அப்போது திடீரென்று உலகம் எல்லையற்ற ஒரு பெருங்கடலாக மாறிவிட்டது. அவன் இதயம் அதில் ஒரு பகுதியாயிற்று. .

அப்புறம் வேறு நாட்கள் வந்தன. வாழ்க்கை அவர்களைத் திடுமெனப் பிரித்துவிட்டது. அவளது வயலட் கண்கள், சாம்பல் நிற மேல்சட்டை, தனது உறுதிமொழியை மணலில் எழுதிப் பின் அழித்துவிட அவள் உபயோகித்த சிறுகுடையின் நுனி, இவற்றின் நினைவுதான் அவனுக்கு எஞ்சியிருந்தன.

மூடி கடகடத்தது. அந்தப் பெண் ஒரு கூடையிலிருந்து சில தட்டையான பாத்திரங்களை எடுத்தாள் . வர்ணம் தீட்டிய கண்ணாடி டம்ளர்களை அவற்றின் மீது வைத்தாள். அவைகளின் மேலே அவள் குனிந்தபோது அவளுடைய நீண்ட தலைப்பின்னல் தோளின் மீது நழுவி விழுந்தது. கடற்கரையிலிருந்த பெண் குட்டையான கூந்தலும், வெண்ணிறக் கழுத்தும், ஒளிவீசும் சருமமும் பெற்றிருந்தாள்.

காலி டப்பாவை எடுத்துக்கொண்டு பையன் உள்ளே ஒடி வந்தான்.

சிறுவர் கூட்டம் ஒன்று இப்போது வாசலருகே நின்று. அந்நியர்களை வெறித்து நோக்கியது. இரண்டாவது டப்பாவையும் அவனிடம் கொடுத்தபோது, பையனின் சந்தோஷத்துக்கு ஒரு அளவேயில்லை. இம்முறை அவன் வெளியே ஒடவில்லை : ஒரு பாயின்மேல் உட்கார்ந்தான். அவன் அம்மா அவனுக்கும் சிறிது தேநீர் கொடுத்தாள், கலைஞன் ஒரு பெரிய துண்டு சர்க்கரையை அவனது கண்ணாடி டம்ளருக்குள் போட்டான். சர்க்கரையிலிருந்து கிளம்பிய குமிழிகளால் சிறுவன் வசீகரிக்கப்பட்டான், அதை வெளியே எடுப்பதற்காக அவன் தன் விரலை உள்ளே நுழைத்தான். சூடான தேநீர் அவன் சருமத்தைச் சுட்ட போதிலும் அவன் வேதனைக்குரல் எழுப்பவில்லை. ஏனெனில், இளகிய சர்க்கரையின் சுவை மிக இனிதாக இருந்தது. ஆராய்ச்சியாளன் புன்னகை பூத்தான். மனிதவர்க்கத்தின் கடந்த காலத்திலிருந்து ஒரு காட்சியை அவன் நினைவு கூர்ந்திருக்கவேண்டும்.