பக்கம்:ஆறு செல்வங்கள்.pdf/13

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



2. கேள்விச் செல்வம்


"கேள்வி ஒரு செல்வம், அதுவும் மிக உயர்ந்த செல்வம்" என்பது வள்ளுவர் கருத்து. இதனை,

செல்வத்துள் செல்வம் செவிச் செல்வம், அச்செல்வம்
செல்வத்துள் எல்லாம் தலை

என்ற குறள் மெய்ப்பிக்கும்.

பத்து ஆண்டுகள் படித்து அறிபவைகளை, முப்பது ஆண்டுகள் பார்த்து அறிபவைகளை, ஐம்பது ஆண்டுகள் ஆராய்ந்து அறிபவைகளை, ஐந்நூறு மணித்துளிகளில் கேட்டு அறிந்துகொள்ளலாம். இதனாலேயே கேள்விச் செல்வம் தலைசிறந்த செல்வம் எனக் கருதப் பெற்றுவருகிறது.

"கல்வியைவிட உயிர்க்கு உற்ற துணை வேறில்லை" என்று கல்விச் செல்வத்தை உயர்த்திக் கூறிய வள்ளுவர், "கற்றிலனாயினும் கேட்க" எனக் கூறியிருப்பதும், பிறர் "கற்றலிற் கேட்டலே நன்று" எனக் கூறியிருப்பதும் கேள்விச் செல்வத்தின் சிறப்பை உணர்த்துவனவாகும். -

மக்களுக்கும், விலங்குகளுக்கும் உள்ள வேற்றுமைகள் பல, அவற்றுள் ஒன்று, "மக்கள் செவி வழியாகவும் சுவையைப் பெறுவார்கள். மாக்களால் இயலாது" என்பது,