பக்கம்:ஆறு செல்வங்கள்.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
4. பொருட் செல்வம்

——————————————————————————————————————————————————————————————————


செல்வம் பலவகை. அவை கல்வி, கேள்வி, அறிவு, அருள், பொருள் முதலியன. அவற்றிலுள்ள பொருளும் பலவகை. அவை பொன், மணி, முத்து, பவளம், பணம் முதலியன. அவற்றிலுள்ள பணமும் பலவகை. அவை செம்பு, ஈயம், வெள்ளி, பவுன், நோட் முதலியன. இவையே பொருட் செல்வம் எனப்பெறும்.

வாழ்வுக்குப் பொருள் தேவை. பொருளற்ற வாழ்வு வாழ்வாகாது. "அருள் இல்லாதவர்க்கு அவ்வுலகமும் பொருளில்லாதவர்க்கு இவ்வுலகமும் இல்லை' என்பது வள்ளுவர் வாக்கு. எவராலும் பொருட்படுத்த முடியாத ஒருவர் எல்லோராலும் பொருட்படுத்தப் பெறவேண்டுமானால், அவர் பொருளைப் பெற்றிருக்க வேண்டும் என்பதும் அவரது கருத்து.

பொருளைத் தேடுவதும், தனக்காக என்றில்லாமல், பிறருக்காகவும் என்று தேடவேண்டும். அதையும் நல்லவழியில் தேடி, நல்ல வழியில் செலவிட்டு, நல்ல முறையில் வாழ்ந்தாக வேண்டும். பிறர்க்குப் பயன்படும் மக்கள் உள்ளூரில் பழுத்த கனிமரத்தை ஒப்பாவார். அல்லாதவர் பழுத்தும் பயன்படா எட்டி மரமேயாவர். ஆம், எட்டி பழுத்தென்ன? ஈயாதார் வாழ்ந்தென்ன?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆறு_செல்வங்கள்.pdf/28&oldid=956424" இலிருந்து மீள்விக்கப்பட்டது