பக்கம்:ஆறு செல்வங்கள்.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

5. அறிவுச் செல்வம்

செல்வம் பலவகை. அதில் அறிவு ஒரு வகை எனக் கூறலாம். இதனால், அறிவும் ஒரு செல்வம் என்றாகிறது. இதைவிட 'அறிவே செல்வம்' என்பதுதான் பொருத்த மானதாக இருக்கும். -

எச்செல்வமும் இல்லாத ஒருவனிடம் அறிவுச் செல்வம் ஒன்றிருந்துவிட்டால் அவன் எல்லாச் செல்வங்களையும் பெற்றவனாவான், எல்லாச் செல்வங்களும் பெற்ற ஒருவன் அறிவுச் செல்வத்தைப் பெறாதவனாக இருந்தால், அவன் எல்லாச் செல்வங்களையும் இழந்தவனாகிவிடுவான்.

எந்தச் செல்வத்தையும் உண்டுபண்ணும் ஆற்றல் அறிவுச் செல்வத்திற்கு உண்டு. பிற செல்வங்களுக்கு இந்த ஆற்றல் இல்லை. இதனாலேயே வள்ளுவர் "அறிவுடையார் எல்லாம் உடையார்' எனக் கூறினார்.

செல்வங்கள் அனைத்துமோ, சில செல்வங்கள் மட்டுமோ, அல்லது தனித்த ஒரு செல்வமோ அறிவற்ற மக்களிடத்தில் நில்லாது என்பது வள்ளுவர் கருத்து. இதனை "அறிவிலார் என்னுடைய ரேனும் இலர்' என்பதால் நன்கறியலாம். *--

பிற செல்வங்களைப் பெற்றவன், தன்னையும் காப்பாற்றிக் கொண்டு அவற்றையும் காப்பாற்றியாக வேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆறு_செல்வங்கள்.pdf/37&oldid=956445" இலிருந்து மீள்விக்கப்பட்டது