பக்கம்:ஆறு செல்வங்கள்.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

38 ஆறு செல்வங்கள்

மறைந்து கிடக்கும் உண்மையையும் எளிதில் அறிவர். அவர்கள் ஏமாறுவதில்லை. எவரையும் ஏமாற்றுவது மில்லை.

உயர்ந்தவர்கள் என்று சொல்வதையெல்லாம் நம்பு வதையோ, தாழ்ந்தவர்கள் என்று சொல்வதையெல்லாம் மறுப்பதையோ, நண்பர்கள் என்று சொல்வதையெல்லாம் ஏற்பதையோ, பகைவர்கள் என்று சொல்வதையெல்லாம் வெறுப்பதையோ அறிவுடையவர்களிடம் காணமுடியாது. இந்நால்வரின் சொல்களிலும் காணப்படுகிற உண்மைகளை மட்டும்.ஆராய்ந்து வாழ்விற்குப் பயன்படுத்திக் கொள்ளும் ஆற்றல் அறிவுடையார்க்கு மட்டுமே உண்டு.

கண்ணாற் கண்டவைகளும்கூட அறிவுடையாரிடத்தில் பொய்த்துப் போவதுண்டு. கடலின் ஆழமானவிடத்து நீர் நீலநிறமாகத் தோன்றும். குறைந்த ஆழமுள்ளவிடத்து நீர் பச்சை நிறமாகத் தோன்றும். அலையிலுள்ள நீர் முத்துப் போன்று வெண்மை நிறமாகத் தோன்றும். இரு கைகளிலும் அள்ளிப் பார்த்தால் நிறமற்று விளங்கும். உண்மை என்னவெனில் நீருக்கு நிறமில்லை என்பதே. இதனால் கண்கண்ட உண்மையைக் கூட அறிவு மறுத்தறிவதைக் காணலாம்.

காதாற் கேட்பவைகளும்கூட அறிவுடையாரிடத்தில் பொய்த்துப் போவதுண்டு. சிவாஜிகணேசன் பாட்டு காதில் விழும் நிழற்படத்திற் கண்டதும் கேட்டதும்கூட நினைவிற்கும் வரும் என்றாலும் பாடிய அவரல்ல வேறொருவர் என்பதும், அதுவும் இப்போது கேட்டது சொந்தக் குரலல்ல, ஒலிப்பதிவு என்பதுவுமே உண்மையாக விருக்கும். இதனால் காது கேட்டு அறியும் உண்மையைக்கூட அறிவு மறுத்தறிவதைக் காணலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆறு_செல்வங்கள்.pdf/40&oldid=956453" இலிருந்து மீள்விக்கப்பட்டது