பக்கம்:ஆற்றங்கரையினிலே.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17. பழையாறை

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னே பொன்னி நாட்டின் நல்லணியாகத் திகழ்ந்தது பழையாறை என்னும் திருநகரம். சோழ மன்னர்க்குரிய மாளிகை அம் மணிநகரில் விண்ணளாவி நின்றது. இறைவன் உறையும் திருக் கோயில்கள் எம்மருங்கும் காட்சி அளித்தன. அவற்றுள் ஒன்று திருப்பட்டீச்சுரம். பழையாறை நகரில் அமைந்த பட்டீச்சுரத்தைப் பாடியருளினார் திருஞான சம்பந்தர்’

பழையாறை நகரம் பல்லவ மன்னனாகிய நந்தி வர்மனது உள்ளத்தைக் கவர்ந்தது. அவன் அந்நகரைத் திருத்தினான்; புதுக்கினான். தன் பெயரையும் அதற்கு அளித்தான், நந்திபுரம் என்னும் பெயர் பெற்ற அந்நகரில் திருமாலுக்குக் கோயில் கட்டினான். அதற்கு நந்திபுர விண்ணகரம் என்ற திருப்பெயர் சூட்டினான். அவ் விண்ணகரம் திருமங்கை மன்னனது பாமாலை பெற்றது.

“ நந்தியணி செய்தநகர் நந்திபுர விண்ணகரம் நண்ணுமனமே” என்ற திருப்பாசுரத்தில் நந்தி மன்னன் அந்நகர்க்குச் செய்த சேவை குறிக்கப்பட்டுள்ளது.

நந்திபுரமாகிய பழையாறையில் தங்கியிருந்த பல்லவ மன்னனை வெல்லக் கருதிப் படை யெடுத்தனர் பகை வேந்தர்; அந்நகரை முற்றுகையிட்டனர். அப்போது காஞ்சி மாநகரத்தில் இருந்த பல்லவப் படை கதித்து எழுந்தது.