பக்கம்:ஆற்றங்கரையினிலே.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கும்பகோணம் 1:4

மறைக்காடு என்னும் தமிழ்ப் பெயரின் மொழி பெயர்ப்பே வேதாரண்யம் என்பது வெளிப்படை.

பண்டைத் தமிழிலே கிழக்கைக் குணக்கு என்றும், மேற்கைக் குடக்கு என்றும் வழங்கினர். தமிழகத்தின் கிழக்கு எல்லையாகவும் மேற்கு எல்லையாகவும் அமைந்த நெடுங்கடல்களை முறையே குணகடல் எனவும், குடகடல் எனவும் சங்க நூல்கள் கூறும். குனவாசல் என்றும், குடவாசல் என்றும் பெயருடைய ஊர்கள் இந் நாட்டில் சில உள்ளன. ‘ குணவாயிற் கோட்டத்து அரசு துறந்திருந்தார்” இளங்கோவடிகள் என்று சிலப்பதிகாரப் பாயிரம் சொல்லும், தஞ்சை மாவட்டத்தில் குடவாயில் என்று பெயர் பெற்றிருந்த ஊர், இப்போது குடவாசல் என வழங்கப் பெறுகின்றது. அந்த வகையில் குடமுக்கு என்பது மேற்கு மூலையில் அமைந்த ஊரைக் குறித்தது போலும் ! அதனைக் கும்பகோணம் என்று வடமொழியிற் பெயர்த்தனர் புராணமியற்றிய புலவர்கள்.

குடமூக்கில் கோயில் கொண்ட சிவபெருமானையும் திருமாலையும் பாமாலை பாடிப் போற்றினர் பெரியோர். தேவாரப் பாடல்களிலும் ஆழ்வார்கள் அருளிய திருப்பாசுரங்களிலும் குடமூக்கு என்றே இவ்வூர் குறிக்கப்பட்டுள்ளது. .

குடமூக்கு என்ற பெயரைக் குடந்தை என்றும் குறுக்கி வழங்குவதுண்டு ஆராவமுதாய், அரவணையிற் பள்ளி கொண்ட திருமாலைக் குடந்தைப் பதியிலே கண்குளிரக் கண்டு வழிபட்டார் நம்மாழ்வார்.

“தீரா வினைகள் தீர என்னை

ஆண்டாய் திருக்குடந்தை ஊரா உனக்கு ஆட்பட்டும்

அடியேன் இன்றும் உழல்வேனோ” என்று மனமுருகிப் பாடினார்.