பக்கம்:ஆற்றங்கரையினிலே.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கும்பகோணம் 116 எண்ணியல் ஆராய்ச்சியில் வல்லவர் என மேலை நாட்டு நுண்ணறிவாளரும் பாராட்டிய கணித மேதை யாகிய இராமானுசம் இளமையிற் கலை பயின்ற கல்லூரி அதுவே ! ஆங்கில மொழியை ஐயந்திரிபற ஒதியுணர்ந்து, இனிமையாகச் சொற்பொழிவாற்றும் திறமை பெற்றுச் சொல்லின் செல்வர் என்று எல்லோராலும் புகழப்பட்ட சீனிவாச சாஸ்திரியாரை உருவாக்கிய கல்லூரியும் அதுவே ! இன்னும் பாரத நாட்டில் பெயர் பெற்ற பேராசிரியர்களாகவும், வழக்கறிஞர்களாகவும், நீதிபதிகளாகவும், நிர்வாகத் திறமையுடையோராகவும், அமைச்சராகவும், ஆட்சியாளராகவும் விளங்கிய அறிஞர் பலர் அக் கல்லூரி மாணவர்களேயாவர்.

நற்றாமரைக் கயத்தில் நல்லன்னம் சேர்ந்தாற் போல் தண்டமிழ்ப் பெருந் தொண்டராகிய சாமிநாதையர் அக்கல்லூரியில் ஒரு நல்லாசிரியராக அமர்ந்தார். இருபதாண்டுகளுக்கு மேலாக அங்கு இடையறாப் பணி செய்தார். ஏட்டில் அடங்கியிருந்த தமிழ்ப் பெருங் காவியங் களையும் சங்க நூல்களையும் ஆராய்ந்து அச்சிட்டு. அழியாப் புகழ் எய்தினார். நாடுதோறும் சென்று ஏடு தேடி, அகப்பட்ட சுவடிகளை எழுத்தெழுத்தாக ஆராய்ந்து, விளங்காத பொருள்களை வல்லார்வாய்க் கேட்டுணர்ந்து, அல்லும் பகலும் அரும்பாடுபட்டு அவர் குடந்தையில் வெளியிட்ட சிந்தாமணிக் காவியத்தைத் தமிழகம் பொன்னே போல் போற்றி மகிழ்ந்தது.

சிந்தாமணியைத் தொடர்ந்து சிலப்பதிகாரத்தையும் மணிமேகலையையும் அச்சிட்டு உதவினார் சாமிநாதய்யர். பத்துப்பாட்டும், புறநானூறும், பிற நூல்களும் ஒன்றன்பின் ஒன்றாய் அச்சேறி வரக்கண்டு தமிழகம் பேரின்பம் அடைந்தது; செந்தமிழ்ச் செல்வத்தை ஐயரவர்கள் வாயிலாக வாரி வழங்கிய கும்பகோணத்தைத் திசை நோக்கி வணங்கிற்று. -