பக்கம்:ஆற்றங்கரையினிலே.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19. சத்திமுற்றம்

நாரைப் பாட்டொன்று பாடி இந்நாட்டில் நல்ல புகழ் பெற்றார் ஒரு கவிஞர். அவர் காவிரி நாட்டுச் சத்தி முற்றத்திலே பிறந்தவர்; வறுமையிற் செம்மையுற்று வாழ்ந்தவர். பல்லாண்டுகளாகத் தம்மோடு உறவு கொண்ட வறுமையை ஒழிக்க ஒரு வழி தேடினார். பசுந்தமிழ் வளர்க்கும் பாண்டிய மன்னனைக் கண்டால் கலி தீரும் என்று கருதினார். மனையாளிடம் விடைபெற்றுப் பாண்டி நாட்டின் தலைநகராகிய மதுரை மாநகரை அடைந்தார்.

அந்நகரில் அவரை அறிந்தார் எவரும் இல்லை. அரண்மனைக் காவலாளரைக் கடந்து மன்னன் முன்னே செல்வதற்கேற்ற ஆடையும் அணியும் அவரிடம் இல்லை. அந்தி மாலை வந்தது. அற்றார்க்கும் அலந்தார்க்கும் உறைவிடமாகிய அம்பலத்திற் போந்து சலிப்புற்றுச் சாய்ந்தார் சத்திமுற்றப் புலவர். -

அவர் மனம் சஞ்சலத்தில் ஆழ்ந்தது. வறுமையுற்ற மனையில் வாழும் மனையாள் என் வரவு நோக்கிக் காத்திருப்பாளே என்று வருந்தினார். பாண்டியனைக் கண்டு வரும் கணவன், பொன்னும் பொருளும் கொண்டு வரும் என்று வழிமேல் விழி வைத்துப் பார்த்திருப்பாளே என்றெண்ணி மனம் பதைத்தார்.

அப்போது ஆகாய வழியே அணியணியாய்ப் பறந்து சென்ற நாரைகளைக் கண்ணுற்றார். அப்பறவைகள்