பக்கம்:ஆற்றங்கரையினிலே.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

123 ஆற்றங்கரையினிலே

நின்ற திருக்கோலத்தில் அவ்விண்ணகரில் காட்சிதரும் பெருமானை வழிபட்டு நெஞ்சுருகி நின்றார் நம்மாழ்வார். தம்மை ஆட்கொண்டருளிய திரு விண்ணகர்ப் பெருமானைப் ‘பொன்னப்பன் மணியப்பன் !

முத்தப்பன்!” என்று வாயார்ப் “புகழ்ந்து போற்றினார். ‘ தன் ஒப்பார் எவருமின்றித் திகழும் என் அப்பன் என்னையும் அடைக்கலமாக ஏற்று அருள் புரிந்தானே’ என்று அகம்

குழைந்தார்.

“ மின்னப்பொன் மதிள்சூழ் திரு

விண்ணகர் சேர்ந்த அப்பன் தன்னொப்பார் இல்லப்பன்”

என்று பாடி மகிழ்ந்தார். அவர் திருவாக்கை ஒதி உருகிய அடியார்கள் அவ்விண்ணகர்ப் பெருமானை ஒப்பார் இல் அப்பன்” என்று அழைத்தார்கள். தனக்கு உவமையில்லாத் தலைவன் என்று பொருள்படும் அத் திருநாமம் ஒப்பில் அப்பன் என மருவிற்று. “ நின்ஒப்பார் பிறரின்றி நீயே ஆனாய் “ என்று வாயாரப் புகழ்ந்து அன்பர்கள் வழி பட்டார்கள். நாளடைவில் ஒப்பிலியப்பன் என்ற பெயரைப் பொதுமக்கள் உப்பிலியப்பன் எனச் சிதைத்து வழங்குவார் ஆயினர். அப் பெயருக்குப் பொருத்தமாக உப்பில்லாத நிவேதனமே அப்பெருமானுக்கு உகந்தது என்னும் கொள்கையும் நிலைபெற்றது.

திருவிண்ணகர் என்ற பழம்பெயர் நாளடைவில் மறைந்து போயிற்று. உப்பிலியப்பன் கோயில் என்பதே இக் காலத்தில் வழங்கும் பெயர். ஒப்பில்லாத அப்பன் உப்பில்லாத உணவையும் ஏற்றுக்கொண்டு வாழையடி வாழையென வந்து வணங்கும் ஏழை மாந்தர்க்கு இன்னருள் புரிகின்றான்.