பக்கம்:ஆற்றங்கரையினிலே.pdf/141

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

39 - ஆற்றங்கரையினிலே

மார்க்கண்டனைக் காக்கும் பொருட்டு ஈசன் வெளிப்பட்டு, காலதேவனைக் காலால் உதைத்த கதை காவியங்களிலும் பாசுரங்களிலும் பாராட்டப்படுகின்றது.

அடைக்கலத்தின் பெருமையை அறிவுறுத்தும் காவியங்களுள் தலைமை சான்றது இராமாயணம் என்பர். இராமன், நாடு துறந்து காடு புகுந்தபோது, இரக்க மற்ற அரக்கர் இழைத்த கொடுமையால் வாடி வருந்திய அறவோர் அப் பெருமானிடம் அடைக்கலம் புகுந்தனர். வாணர நாட்டில் வாலியின் கொடுமைக்கு ஆற்றாத சுக்கிரீவன் இராமன் அடிபணிந்து அடைக்கலம் புகுந்தான். இறக்கும் தறுவாயில் மெய்ஞ்ஞானம் உற்ற வாலியும் தன் மைந்தனான அங்கதனை இராமனிடம் அடைக்கலமாக ஒப்புவித்தான். அறநெறி துறந்த இராவணன் தம்பியாகிய விபீஷணனும் இராமனைச் சரண் அடைந்தான். இவ்வாறு அடைக்கலம் புகுந்தோரை எல்லாம் ஆதரித்து அவர் மனக்கவலையை மாற்றி யருளிய பெருமையே இராமாவதாரத்தின் பெருமையாகும்.

அடைக்கலத்தின் அருமையறிந்த தமிழ் நாட்டார் அதனைப் பலவாறு போற்றுவார் ஆயினர். அடைக்கலபுரம் என்னும் பெயருடைய ஊர்கள் தமிழ் நாட்டில் உண்டு. பாடல் பெற்ற பழம்பதிகளில் புகலூர் என்றும், புகலி என்றும் ப்ெயர் பெற்ற ஊர்கள் உண்டு. புகல் என்ற சொல்லுக்கு அடைக்கலம் என்பது பொருள். அடைக்கலம் தரும் ஈசன் அமர்ந்தருளும் புகலூரிலே போந்து,

“ பூவார்ந்த பொன்னடிக்கே போதுகின்றேன்

பூம்புகலூர் மேவிய புண்ணியனே.”

என்று பாடி இறைவன் திருவடி நிழல் அடைந்தார் திரு நாவுக்கரசர், சீகாழி என்று இப்போது வழங்கும் சிறந்த ஊருக்குப் புகலி என்ற பெயரும் உண்டு முன்னொரு காலத்தில் விண்ணவர் கோமானுக்கு அபயம் அளித்துக்