பக்கம்:ஆற்றங்கரையினிலே.pdf/145

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25. கருவூர்

பல்லாயிரம் ஆண்டுகளாகத் தமிழ் நாட்டின் ஒர் அங்கமாய்த் திகழ்வது கொங்கு நாடு. மலை வளமும் நிலவளமும் வாய்ந்த அந்நாட்டிலே கொல்லி மலை உண்டு; வெள்ளிமலை உண்டு; ஆனைமலை உண்டு; நீலமலை உண்டு; பாலைமலை உண்டு. பழனி மலை உண்டு.

இத்தகைய பெருமை வாய்ந்த கொங்கு நாட்டிலே காவேரியாறு பரந்து பாய்கின்றது. அவ் ஆற்றின் பெருக்கத்தையும் மேட்டூர்த் தேக்கத்தையும் அந் நாட்டிலே காண்பது ஒர் ஆனந்தம். கவிஞர் பாடும் புகழுடைய காவிரியாற்றிலே சேரும் பேறு பெற்ற சிற்றாறுகளின் கரையில் கருவூரும் பேரூரும் காட்சி அளிக்கின்றன. அமராவதி யாற்றின் கரையில் அமைந்துள்ளது கருவூர்; நொய்யல் என்னும் காஞ்சியாற்றின் கரையில் நின்று நிலவுகின்ற்து பேரூர். கருவூரிலே பிறந்தேன்; பேருரை நோக்கிப் போகின்றேன்’ என்று பொருள்படப் பாடினார் ஒரு பெரியார். “ஆதியிலே எங்கள் ஊர் கருவூர் ஆகும்; அந்தத்தில் போய் அடைவோம் பேரூர் தன்னில்” என்பது அவர் திருவாக்கு. அவ்வாக்கிலே ஒரு சிறந்த உண்மை உண்டு. கருவிலே உருவாகிப் பிறந்தோர்'அனைவரும் கருவூரைச் சேர்ந்தவரேயாவர்; பிறவித் துயர் ஒழித்துப் பேரின்ப நலந்தரும் இடமே எல்லோரும் சென்றடையும் பேரூர் ஆகும்.