பக்கம்:ஆற்றங்கரையினிலே.pdf/204

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36. செப்பறை

பொருனையாற்றின் கரையிலே செப்பறை என்றொரு தலம் உண்டு; தனியே அதற்கொரு நலம் உண்டு. சோலையும் வயலும் சூழ்ந்த அத்திருப்பதியில் தனக்குவமை யில்லாத் தலைவன் தன்னந் தனியனாய்த் தாண்டவம் புரிகின்றான். அழகிய கூத்தன்’ என்னும் அருமைப் பெயர் பெற்ற அப் பெருமான் ஐந்தொழில் புரியும் ஆலயத்தின் அருகே அறு தொழிலோர் இருக்கை இல்லை; மாட வீதிகளைச் சுற்றி மக்கள் குடியிருப்பும் இல்லை.

இத்தகைய செப்பறையைச் சேர்ந்த சிற்றுார் இராச வல்லிபுரம் எனப்படும். பயிர்த் தொழில் செய்யும் கார் காத்த வேளாளர் பண்புற்று வாழும் அவ்வூரில் அகிலாண்ட நாயகி கோயில் கொண்டுள்ளாள். அவ்வம்மையை மதுரத் தமிழாற் பாடினார் மாதவச் சிவஞான முனிவர்.

“அருள்ஞான வாரியே

ராசை மேவிய செல்வ அகிலாண்டம் என்னும் அரசே ”

என்பது அவர் திருவாக்கு.

அருட்செல்வமும் பொருட்செல்வமும் உடையார் பலர் அவ்வூரில் வாழ்ந்தார்கள். செப்பறையில் ஆனந்த நடம் புரியும் அழகிய கூத்தர்க்கு வழிவழியாகத் தொண்டாற்றும் திருமடம் ஒன்று அங்குண்டு. செப்பறை