பக்கம்:ஆற்றங்கரையினிலே.pdf/220

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காயல் மாநகரம் 218

சோழ நாட்டுத் துறைமுகமாகிய காவிரிப்பூம்பட்டினத்தில் கடல் வழியாக வந்து இறங்கிய குதிரைகளை, நீரின் வந்த நிமிர் பரிப் புரவி’ என்று பட்டினப்பாலை குறிக்கின்றது. பாண்டி நாட்டுத் துறைமுகத்திலும் குதிரைகள் இறக்குமதி செய்யப்பட்டன என்பது மார்க்கப் போலோவின் குறிப்பு களால் தெரிகின்றது.

பாண்டிய மன்னர்கள் தம் குதிரைப்படையை வலுப் படுத்தும் கருத்தோடு பெரும் பொருள் செலவிடுகிறார்கள். ஆண்டுதோறும் ஐயாயிரம் குதிரைகள்வரை இறக்கும்தி செய்கின்றார்கள். ஆயினும் அவற்றைப் பேணி வளர்க்கும் முறை பாண்டி நாட்டார்க்குப் பிடிபட வில்லை. அக் குதிரைகளுக்கு இந்த நாடும் ஒத்துக் கொள்ளவில்லை. ஆதலால் அவை வலியிழந்து, வாலும் தோலுமாகி ஒல்லையில் இறந்து விடுகின்றன. காயல் துறையில் குதிரை வாணிபம் செய்வோர் ஆண்டுதோறும் கொள்ளை ஊதியம் அடைகின்றார்கள் என்ற செய்தி அவர் குறிப்பிலே காணப்படுகின்றது.

இன்னும் தென்பாண்டி நாட்டு மக்களின் பழக்க வழக்கங்களைக் கூறுமிடத்தில் தாம்பூலம் போடும் பழக்கத்தை அவர் விளக்கமாக எழுதியுள்ளார். வெற்றிலை போடும் பழக்கம் தொன்றுதொட்டு இந்நாட்டில் நிகழ்ந்து வருகின்றது. தமிழ் நாட்டார்க்கு வெற்றிலையில் உள்ள விருப்பம் வேறு எப்பொருளிலும் இல்லையென்றே சொல்லலாம். செல்வர் மாடங்களில் வெற்றிலைச் செல்லம் உண்டு. ஏழையர் மடியிலும் வெற்றிலைப்பை உண்டு. இலையமுது’ என்ற சிறப்புப் பெயர் பெற்றுள்ளது வெற்றிலை, பாடுபட்டுப் பிழைக்கும் ஏழை மக்கள் வயிறு காய்ந்தாலும் வெற்றிலை போடாதிருக்க மாட்டார்கள். வெற்றிலைக்கும் விதியில்லாத வறியவனை வெறுவாய்க்கு இலை கெட்டவன்’ என்று வசை கூறுவர்.