பக்கம்:ஆற்றங்கரையினிலே.pdf/238

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

W. சேரநாடு

“புனலம் கள்ளின் பொலந்தார்க் குட்டுவன்

முழங்கு கடல் முழவின் முசிரி’

- புறநானூறு.

43. முசிரி

கொச்சியிலே குறுணி மிளகு என்று மெச்சிப் பேசுவர் தென்பாண்டி நாட்டார். மலைவளம் மல்கிய சேர நாட்டில் மனமும் சுவையும் உடைய நல்ல மிளகு முன்னாளில் மிகுதியாக விளைந்தது. மேலை நாட்டார் அதனை மிகவும் விரும்பினர். சிறப்பாகக் குட்டநாடு என்னும் பகுதியில் விளைந்த காரசாரமான மிளகு அவர்களுக்கு மெத்தப் பிடித்திருந்தது, உயர்ந்த விலை கொடுத்து அவர்கள் அம்மிளகை வாங்கித் தம் மரக்கலங்களில் ஏற்றிச் சென்றனர்.

அந்நாளில் சேரநாட்டுக் கடற்கரையில் முசிரி என்னும் துறைமுகம் சிறந்து விளங்கிற்று. பெரியாறு கடலில் பாயும் இடத்தில் வீற்றிருந்த முசிரி மாநகரம் குடகடலின் கோமகள் என்று கொண்டாடத்தக்க செல்வச் செழுமை வாய்ந்து திகழ்ந்தது. மேலைநாட்டுக் கப்பல்கள் அத்துறைமுக நகரத்திற் போந்து செம்பொன்னைச் சொரிந்து கரு மிளகை ஏற்றிச் சென்ற செய்தியை அகநானூறு என்னும் பழைய தமிழ் நூல் அழகாகக் கூறுகின்றது: