பக்கம்:ஆற்றங்கரையினிலே.pdf/245

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

243 ஆற்றங்கரையினிலே

பழகிய மங்கை, கானகப் புல்லிலும் கல்லிலும் எவ்வாறு துயில்வாள் என்று கலங்கினான். காட்டில் வாழ்வதற்கு எவ்வகையிலும் தகுதியற்ற சிதையால் என்னென்ன தொல்லைகள் வருமோ என்று எண்ணிக் கவலையுற்றான்.

கணவனுடன் கான்கத்திற்குப் புறப்பட்ட சீதையின் உள்ளத்தில் இன்பமே நிறைந்து நின்றது. மாளிகையையும், மஞ்சத்தையும் மறந்தாள், காட்டின் கடுமையையும் கதிரவன் கொடுமையையும் அறியாளாயினாள். கங்கைக் கரையில் களியன்னமும் மடஅன்னமும் நடமாடக் கண்டு களித்தாள். மரம் அடர்ந்த சோலைகளைக் கண்டு மகிழ்ந்தாள். புன்னகை பூத்த முகத்தோடு விளையாடிக் கொண்டு கணவனுடன் வழி நடந்தாள்.

இராமனும் சீதையும் கோதாவரியாற்றின் கரையை வந்து அடைந்தார்கள். செஞ்சொற் கவிஞரின் உள்ளம் போல் தெளிந்து சென்ற தண்ணிரைக் கண்டு குளிர்ந்தது அவர்கள் நெஞ்சம். அவ்வாற்றங் கரையில் ஒர் அழகிய அன்னம் ஒதுங்கிச் சென்றது. ஒரு யானைக் கன்று தண்ணிரைப் பருகிக் கரையை நோக்கி நடந்து வந்தது.

ஆற்றங் கரையில் அன்னத்தின் நடையைக் கண்ட இராமன் அதன் நடையோடு சீதையின் நடையை ஒப்பிட்டுப் பார்த்தான். மிதிலை மாளிகையில் அவள் மனக்கோலத்தில் நடந்து வந்த அணி நடையும், கரடு முரடான கானகத்தில் மரவுரி புனைந்து நடந்து வந்த மணி நடையும் அலை அலையாக அவன் மனத்தில் எழுந்து இன்பம் ஊட்டின. பட்டு விரித்த மாளிகையிலும், பாதையற்ற கானகத்திலும் பாங்குற நடந்த அந்நடையின் அழிகை நினைத்து அகமகிழ்ந்தான். புன்முறுவல் அவன் முகத்திலே தோன்றிற்று. சிந்தனை தேக்கிய முகத்தில் எழுந்த முறுவல் சிறிய முறுவலாகவே அமைந்தது.