பக்கம்:ஆற்றங்கரையினிலே.pdf/252

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46. கங்கைத்துறை

அரக்கர் என்பவர் இரக்கம் அற்றவர்; அனைத்துலகும் தாமே ஆளும் ஆசை உற்றவர். ஒரு காலத்தில் அவர் இவ்வுலகத்தில் ஆதிக்கம் பெற்றனர். அறம் வாடிற்று. மறம் எங்கும் தலைவிரித்து ஆடிற்று. அப்போது அயோத்தி மாநகரில் அவதரித்தான் இராமன். நல்லோர் செய்த நல்வினையாலும் தீயோர் செய்த தீவினையாலும் கோசவையின் திருமகனாய்த் தோன்றினான் இராமன்; நாடாளும் உரிமையை இழந்து கானகம் நோக்கி நடந்தான். அப்பெருமானோடு சீதையும் இலக்குவனும் சென்றார்கள்.

நாடு துறந்து மூவரும் கங்கையாற்றின் கரையை வந்து அடைந்தார்கள். அங்கே அருந்தவம் முயன்ற முனிவர்கள் அறமே உருவாகிய மூவரையும் கண்டு அகமகிழ்ந்தனர்; ஆனந்தக் கண்ணிர் சிந்தினர்; அழகிய சொல்மாலை அணித்து போற்றினர் அன்பென்னும் அமிழ்தத்தை ஊட்டினர். அம்முனிவர்களுடன் ஒரு தவச்சாலையில் ஆனந்தமாக உரையாடிக் கொண்டிருந்தான் இராமன்.

அப்போது அங்கு வந்தான் ஒரு வேடர் தலைவன். அவன் கன்னங்கரிய மேனியன்; செம்மை சான்ற மனத்தினன். கங்கையாற்றிலே பிடித்த மீனை ஒரு கையிலும், கொம்பிலே வடித்த தேனை மற்றொரு கையிலும் கொண்டு, இராமன் தங்கியிருந்த தவச் சாலையின் முன்னே நின்று,

“ தேவா நின்கழல் சேவிக்க வந்தனன்

நாவாய் வேட்டுவன் நாயடியேன்"