பக்கம்:ஆற்றங்கரையினிலே.pdf/253

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25t ஆற்றங்கரையினிலே

என்று கூவினான். அவனை ஐயனிடம் அழைத்துச் சென்றான் இலக்குவன்.

வேடர் பெருமானாகிய குகன் இராமனைக் கண்குளிரக் கண்டான் உள்ளம் தழைத்தான்; மீனையும் தேனையும் அவன் முன்னே வைத்தான்; திருவடியில் விழுந்து வணங்கி எழுந்தான். ‘ தேவரீர் திருவமுது செய்வதற்காக இவற்றைத் திருத்திக் கொணர்ந்தேன்’ என்று அன்பு ததும்பப் பேசினான்.

வேடன் செயல் கண்ட முனிவர்கள் வெறித்து நோக்கினர். ‘ குலத்தளவே ஆகும் குணம் என்பதை மெய்ப்பித்துவிட்டானே குகன் என்று எண்ணி மனம் குழம்பினர். அந்நிலையில் அவரை நோக்கிப் புன்னகை புரிந்தான் இராமன். அகத்தில் அமைந்த அன்பின் சின்னங்களாகும் இப்பொருள்கள்: ஆதலால் இவை அமிழ்தினும் சிறந்தன என்று நல்லுரை பகர்ந்தான்.

சடை முடியும் மரவுரியும் தரித்துத் தவச் சாலையில் இருந்த இராமன் கோலத்தைக் கண்டு உள்ளம் உருகினான் குகன். ஐயா ! மண்ணுலகம் செய்த பாவத்தால் அன்றோ இம்மன்னன் மணிமுடி துறந்தான்? ஏற்றமும் தோற்றமும் இழந்து இவ் ஆற்றங்கரையிலே அமர்ந்தான்; எத்துணைச் சிறப்பாகக் காண வேண்டிய கமலக் கண்ணனை இந்தக் கோலத்தில் காண்கின்றேன்? என் கண் செய்த பாவம் கடலினும் பெரிது’ என்று மனம் கரைந்து நின்றான்.

அந்நிலையில் அந்திமாலை வந்தது. ஐயன் குகனை நோக்கி, நாளைக் காலையில் கங்கையைக் கடப்பதற்கு நீ உதவி புரிதல் வேண்டும். ஆதலால் இன்று உன் ஊருக்குச் சென்று நாளை ஒடம் கொண்டு வருக என்று விடை கொடுத்தான். அச்சொல் வேடன் உள்ளத்தில் அம்பு போல் தைத்தது.’ என்னைப் போய்வா என்றானே! நான் எவ்வாறு போவேன்? எங்கே போவேன்?’ என்று அங்கலாய்த்தான்.