பக்கம்:ஆற்றங்கரையினிலே.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. திருப்பாதிரிப்புலியூர்

வட நாட்டில் சோன்ை யாறு கங்கை யாற்றில் கலக்கும் இடத்திற்கு அருகே பாடலிபுத்திரம் என்ற நகரம் ஒன்று முன்னாளில் பண்புற்று விளங்கிற்று. மகத நாட்டின் தலைநகரமாகத் திகழ்ந்த அம் மூதூர், அசோக மன்னன் காலத்தில் கலைவளம் பெற்றுத் தலையெடுத்து நின்றதென்று பாரத நாட்டு வரலாறு தெரிவிக்கின்றது.

தமிழ் நாட்டிலும் ஒரு பாடலிபுத்திரம் கெடில நதிக் கரையில் எழுந்தது. சமண சமயத்தைப் பேணி வளர்த்த அப் பெரும்பதியில் சான்றோர் பலர் வாழ்ந்தனர். அங்கிருந்த சமணப் பள்ளியில் பன்மொழிப் புலவர் பலர் பணி யாற்றினர். செந்தமிழ்க் கல்வி செழித்தோங்கித் தழைத்தது.

இத்தகைய புகழ் பெற்ற நகரத்தின் அருகே அமைந்த திருவாமூர் என்ற சிற்றுாரில் திருநாவுக்கரசர் பிறந்தார். மருள் நீக்கியார் என்னும் பிள்ளைப் பெயருடைய அவ் அறிஞர் இளமையிலேயே பெற்றோர் இருவரையும் இழந்தார்; தமக்கையாகிய திலகவதியாரே தஞ்சம் எனக் கருதி வாழ்ந்தார். அம் மங்கைக்குப் பெரியதோர் இடர் வந்துற்றது. அவர்க்கு மனமகனாக உறுதி செய்யப் பெற்றிருந்த தலைமகன் திருமணம் நிகழ்வதற்கு முன்னமே போர்க்களத்தில் உயிர் கொடுத்துப் புகழ், கொண்டான். அக்கால வழக்கத்திற்கு ஏற்பத் திலகவதியார் கற்புநெறி வழுவாமல் உடன் கட்டையேறி உயிர் துறக்கத் துணிந்தார்.