பக்கம்:ஆற்றங்கரையினிலே.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

77 ஆற்றங்கரையினிலே

குருஞான சம்பந்தருக்கு ஒளி நெறி யருளிய கமலை ஞானப் பிரகாசர் பிறந்த ஊர் திருவாரூரே ! இத்தகைய பெரியோர்கள் வருகையை எதிர்நோக்கியே அப்பாலும் அடிச் சார்ந்த அடியார்க்கும் அடியேன் என்று நம்பி ஆரூரர் பாடினார் போலும் !

அறவோரும் துறவோரும் அரும்பேறு பெற்ற ஆரூரில் இசை ஞானச் செல்வர் மூவர் நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்னே தோன்றினர்; இன்னிசை வடிவாக நின்ற ஈசனை வழிபட்டு இன்பவாரியில் மூழ்கினர்; இறைவன் பெருமையைப் பேசாத நாளெல்லாம் பிறவா நாளே என்றெண்ணி எண்ணிறந்த இசைப்பாடல்கள் இயற்றினர்; தென்னிசையாகிய இன்னிசைக்குப் புத்துயிர் அளித்தனர்.

இன்று இன்னிசை மும்மணிகள் என்று போற்றப் படும் மூவருள் முதல்வர் தியாகராசர். திருவாரூர்ப் பெருமான் பெயரே இவர் பெயராக அமைந்தது. தெலுங்கில் இவர் பாடியுள்ள கீர்த்தனங்களில் பக்தித்தேன் சொட்டுகின்றது என்று பண்ணின் திறம் அறிந்தோர் கூறுவர்.

மும்மணிகளில் மற்றொருவராகிய முத்துசுவாமி தீrதர் தியாகராசப் பெருமானையும் அவர் தொண்ட ராகிய நம்பி ஆரூரரையும் போற்றினார்; தேவாரப் பண்ணையும் பாட்டையும் கண்ணெனக்கருதினார். இவர் இயற்றியுள்ள “ தியாகராஜ யோகவைபவம்” என்னும் இசைப் பாட்டு, தேவாரப் பண்முறையைத் தழுவியதென்று தக்கோர் கூறுவர்.

இசைமணிகள் வரிசையில் வைத்துப் போற்றப்படும் இன்னொருவர் சியாமா சாஸ்திரி ஆவர். இவர் தமிழ்க் கீர்த்தனங்களும் இயற்றியுள்ளார். இன்னிசை நன்மணி களாகிய இம்மூவரும் ஒரே காலத்தில் பிறந்தருளிய பெருமையைத் தமிழகம் மறந்துவிடலாகாது.