பக்கம்:ஆற்றங்கரையினிலே.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

35 ஆற்றங்கரையினிலே

உணர்த்துகின்றது. எனவே, சோழ நாட்டில்ே பிறந்து, பாண்டி நாட்டிலே கற்பின் திறம் காட்டி, சேர நாட்டிலே தெய்விகம் உற்ற கண்ணகி காவிரியாற்றின் கரையில் உள்ள கோழியூரிலும் கோவில் கொண்டு அருள் புரிவாளா யினாள்.

கோழியூரில் அரசாண்ட கோப்பெருஞ் சோழனுக்கும் பிசிர் என்ற சிற்றுாரில் வாழ்ந்த ஆந்தை என்னும் புலவருக்கும் இடையே தோன்றி வளர்ந்த நட்பின் திறத்தினைச் சங்க இலக்கியம் பாராட்டுகின்றது. சோழ வள நாட்டின் தலைநகரில் ஏற்றமும் தோற்றமும் வாய்ந்து விளங்கிய வேந்தனும், பாண்டி நாட்டுப் பட்டியொன்றில் ஏழையாய் உயிர் வாழ்ந்த புலவரும் தலைசிறந்த தோழராய் இருந்தனர். ஒருநாள் அந்தி வானத்தில் அழகுறப் பறந்து சென்ற அன்னப் பறவைகளைக் கண்டார் ஆந்தையார். வடக்கு நோக்கிச் சென்றுகொண்டிருந்த அவ் அன்னங் களில் ஒன்றைத் தம் தோழராகிய சோழ மன்னனிடம் துரதனுப்பத் துணிந்தார். அன்னமே ! நீ செல்லும் வழியில் சோழ நாட்டுக் கோழியூரிலே வான் அளாவிய மாளிகையைக் காண்பாய் ! அங்கே வாழ்கின்ற மன்னன் முன்னே சென்று நான் ஆந்தையின் தொண்டன் என்று சொல் உடனே முகமலர்ந்து உனக்குப் பரிசளித்து அனுப்புவான் அப் பார்வேந்தன் என்று பேசினார் ஆந்தையார்.

இத்தகைய மேன்மையுற்றிருந்த உறையூரிலே முத்தமிழும் உயர்ந்து ஓங்கி வளர்ந்தது. தமிழ் இசையைப் பண்ணோடு பாடவல்ல பாணர் குலம் மன்னராலும் மக்களாலும் ஆதரிக்கப் பெற்றது. பாணர் குலம் மிகப் பழமை வாய்ந்த தமிழ்க் குலமேயாயினும், தாழ்ந்த வகுப்பாகக் கருதப்பட்டது. உயர்ந்த குலத்தவரால் ஒதுக்கப்பட்ட பாணர்கள் உறையூரில் ஒடுங்கி அடங்கி உயிர் வாழ்ந்தார்கள். ஆலயங்களில் சென்று வழிபடும் உரிமை அன்னார்க்கு இல்லை.