பக்கம்:ஆற்றங்கரையினிலே.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

95 - ஆற்றங்கரையினிலே

தெனத் திகழ்ந்த அப்பாவையைப் பேணி வளர்த்தார் பட்டர்பிரான் என்னும் பெரியார். இளமையிலேயே கண்ணன் திருவுருவம் அவள் கண்ணிலும் கழுத்திலும் புகுந்து நிறைந்தது. “ பச்சைமா மலைபோல் மேனி, பவளவாய் கமலச் செங்கண் அச்சுதா “ என்று அவள் பாடிப் பாடிப் பரவசம் உற்றாள்; அப் பெருமானது திருமேனியின் அழகைத் தன் உள்ளத் திரையில் உயிரோவிய மாக எழுதி மகிழ்ந்தாள். உண்ணும் சோறும் பருகும் நீரும் எல்லாம் கண்ணனே என்று எண்ணிக் களிகூர்ந்தாள். அவன் திருவிளையாடல்களை நெஞ்சார நினைந்து போற்றினாள்.

இவ்வாறு பள்ளத்தில் பாயும் வெள்ளம் போன்று பரந்தாமன் திருவடியிலே படிந்த உள்ளமுடைய மங்கை மணப் பருவம் உற்றாள். கண்ணினைக் காக்கும் இமை போல் அக் கோதையைப் பாதுகாத்த பட்டர்பிரான் குணநலம் வாய்ந்த மணமகன் ஒருவனைத் தேடத் தொடங்கினார். தந்தையின் கருத்தறிந்த கோதை மனம் நொந்தாள். கருமுகில் வண்ணன் - கமலக் கண்னன் அவனே என் கணவன் என்று அருமைத் தந்தையிடம் அறிவித்தாள்.

கோதையின் கருத்தறிந்த தந்தையார் கவலையுற்றார். ஊழி முதல்வனாய் நின்ற ஒருவன் ஏழையாய கோதையின் காதலை ஏற்றுக் கொள்வானோ என்று ஏங்கினார். மன வாக்குக் கெட்டாத மணிவண்ணன் இவள் மணவாளனாய் வருவானோ என்று மயங்கினார். ‘ தனக்குவமையில்லாத் தலைவனுக்கு இவள் தாரம் ஆவளோ என்று தளர்ந்தார். ஓங்கி உலகளந்த உத்தமன் வாரானாயின் ஏங்கி நிற்கும் கோதையின் உள்ளம் என்னாகுமோ என்று இடருற்றார்.

அவர் கவலை யறியாத கன்னி அல்லும் பகலும் அஞ்சன வண்ணனையே நினைந்து நெஞ்சுருகி நின்றாள்.