பக்கம்:ஆலமரத்துப் பைங்கிளி.pdf/144

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



12

கண் மயக்கம்

ம்மா!” என்று அழைத்தார் அப்பா. கூட்டுக் கறி செய்ய வாழைக்காய் நறுக்கிக் கொண்டிருந்தேன். குரல் கேட்டதும், கைவேலையை அந்தரத்தில் விட்டுவிட்டு ஒடினேன். ஒடும்போது என்னுடன் கூட கைவளை ஒலியும் மெட்டிகளின் ஒசையும் ஓடிவந்தன. இவ்வளவுதான? ‘அம்மா’ என்ற அந்த அன்பின் அழைப்புக் குரலுமல்லவா எனக்குப் போட்டியாக அமைந்துவிட்டது? போட்டியாவது, ஒன்றாவது? ஆமாம்; போட்டியேதான்! அது பாசத்தின் போட்டி ‘அம்மா’ என்றுதான் என்னை என் தங்தை கூப்பிடுவார். ஒருபுறம் எனக்குச் சிரிப்புச் சிரிப்பாக வரும். “அப்பா, அப்பா! ஒரு சின்னச் சந்தேகம்! ஆமா; நானு உங்களைப் பெற்றேன்?” என்று ஒரு முறை கேட்டேன். என் சிரிப்பையும் அவர் வாங்கிக் கொண்டு அவர் வயிறு குலுங்க நகை சிந்திய நிகழ்ச்சி நான் ஒவ்வொரு தவணையும் எண்ணிக்கொள்ளுவேன்; என்னுள்ளேயே சிரித்துக் கொள்ளவும் தவறுவதில்லை. மறுபுறம், ‘அம்மா’ என்ற அச்சொல் என் கண்களைக் கிண்டிவிடும். கண் வேதனையை நெஞ்சின் ஈரப்பசை மிகுந்த இடங்களிலெல்லாம் உணர்வேன். நான் மட்டுக்தான அழுவேன்? ஊஹும், என்னுடைய உடம்பின் ரத்தநாளங்கள் ஒவ்வொன்றுமல்லவா என்னுடன் இணைந்து விம்மி வெடித்துக் கதறும்?