பக்கம்:ஆலமரத்துப் பைங்கிளி.pdf/168

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14 பிறந்த நாள்

எட்டடிக் குச்சுக்குள்ளே வாசம் செய்துவந்த அவள், அந்த இரண்டடுக்கு மாளிகைக்குள் நுழைந்து வேலை செய்யும் அதிர்ஷ்டத்தைப் பெற்றதானது, தன்னுடைய பூர்வ ஜென்மத்தின் பலனே என்பது அவளது அசைக்க முடியாத-அந்தரங்க சுத்தியான நம்பிக்கையாகும். அந்த நம்பிக்கையே அவளுக்கு வாய்த்திட்ட ஓர் எதிர்காலமாகவும் தோன்றியது. ஆகவே, அவள் அந்தப் பெருமனையின் ஓர் அங்கமாகக் கருதப்படும் அளவுக்கு உழைத்தாள். உண்மை தப்பாமல் உழைத்தாள். காஞ்சிவரம் பட்டுப் புடவைகளும் ஷிபான் ஸில்க் சேலைகளும் புழுங்கிய இடத்தில், அவள் மானம்புச்சாவடிக் கைத்தறிச் சேலையை கிழிசல் மறைத்து, அழுக்கைத் கசக்கித் துவைத்துக் கட்டிக் கொண்டுதான் நடமாடினாள்!

'நாகரிகம், செல்வந்தர் இல்லங்களிலேதான் தோன்றுகிறது’ என்று ஒரு வாசகம் உண்டு. இது முற்றிலும் உண்மை. இல்லாவிட்டால், அந்தப் பங்களாவில் ஒரு வாரத்துக்குப் பதினைந்து தினுசுப் புடவைகளும் பதினைந்து ரக சோளிகளும் அர்ஜண்ட் சலவைக்கு அனுப்பப்படுமா?

முன்மாதிரி வேலாயி இல்லை இப்போது. தலைச்சன் பிறந்தும் ஒரு வருஷத்துக்கு மேலாகி விட்டது. பழைய