பக்கம்:ஆலமரத்துப் பைங்கிளி.pdf/201

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

199


ணத்தைப்பற்றிய கவலைதான் அனந்தராமனுக்கு உண்டாயிற்று. ஆனால் கல்யாணத்தைப்பற்றி வரன் விஷயமாகத் துளிகூட யோசிக்க வேண்டிய நிர்பந்தமில்லை அவரைப் பொறுத்த மாத்திரத்தில். கையில் கரும்பை வைத்துக் கொண்டு கற்கண்டுக்கு யாரேனும் அலைவார்களா என்ன? தன் சகோதரி மகன் மூர்த்தியை சுலோவிற்கென்றே நீர்த்தாரணம் செய்தவர் அட்வகேட். மூர்த்தி ஒரு பி. எஸ்ஸி. படிப்பிற்குப் படிப்பு; அழகுக்கு அழகு; அந்தஸ்துக்கு. அந்தஸ்து. பின் என்ன? ஜாதகங்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன. ஆனால் என்றைக்கோ அவர்கள் இரண்டு இதயங்களும் பரஸ்பரம் பரிமாறிக் கொண்டு விட்டனவே!....

சுலோ படிக்கும்பொழுதே வீணை மீட்டக் கற்றுக் கொண்டாள். நாட்கள் செல்லச் செல்ல 'வீணைப் பைத்தியம்' வளரத்தான் வளர்ந்தது. இதுபற்றி அவள் பெற்றோர்களுக்கும் சந்தோஷமே. தமக்கை வீணையைக் கையில் எடுப்பதைப் பார்த்து விட்டால் போதும். கண்ணன் குழலோசை கேட்ட கோபியர்களைப் போல ஓடோடிச் சென்று அவள் வாசிக்கும் கானத்தை ரசிக்கத் தொடங்கி விடுவாள் வாஸந்தி. நாளடைவில் வாஸந்தியின் ரசிகத்தன்மை அவளையும் வீணை சிக்ஷை பெறத் தூண்டி விட்டது.

விரைவில் சுலோ மிஸஸ் மூர்த்தி ஆனாள். அவனும் ஒரு சங்கீதப் பித்தன். பித்தம் தெளிய மருந்து சுலோவின் இசை வெள்ளம். இப்படியல்லவா ஜோடி பொருந்த வேண்டும்? அவளும் முன்கூட்டியே வேண்டுகோள் எதுவுமின்றி, ஆனால் குறிப்பறிந்து - ஜாடை தெரிந்து வீணை வாசித்துத் தன் அத்தானைப் பரவசப்படுத்தத் தவறுவது கிடையாது.