பக்கம்:ஆலமரத்துப் பைங்கிளி.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

4
குழந்தைத் தெய்வம்

ங்கரன் குடியிருப்பிலே செக்குவைத்துச் செக்கு மாடாக உழைத்துப் பிழைத்த பழம்புள்ளி செ. மு. அண்ணாமலை. அக்கரைச் சீமைக்கு ஐந்து ‘கணக்கு’ப் போய்விட்டுத் திரும்பிய தகப்பன்காரர், அண்ணாமலைக்குச் சொத்துச் சுகம் தேடி வைக்கவில்லை என்றாலும், ‘கடன்கப்பி’யைச் சீதனமாக்கிச் செல்லவில்லை. ஆகவே தான், இவரால் மானமாகத் தப்ப முடிந்தது.

எழுபது அடி நீளமும் காற்பது அடி அகலமும் கொண்டிருந்த அந்தச் சிறிய இடைவெளியில்தான் செக்குப் போட்டிருந்தது. கடைவாயில் நாலு பல் போட்டிருந்த சந்தைப்பேட்டைச் செவலைக்காளை ஒன்று. குத்துக் கட்டையின் முகதலைவில் பாரத்தைச் சமன் செய்ய வைத்திருந்த செம்பூரான் கல்லின்மீது அட்டணைக் கால் போட்டுக்கொண்டு திருக்கை வால் தார்க்குச்சியும் கையுமாகக் குந்தி மாடு ஓட்ட ஓர் எடுபிடிப் பொடியன்.

கோழி கூப்பிடத் துயில் நீக்கும் அண்ணாமலை ஒரு பீங்கான் நீராகாரத்தை மடக் மடக்கென்று குடித்து, ஒரு வாய்க்கு வெற்றிலைச் சருகு போட்டுக்கொண்டு, விபூதி மடலிலிருந்து திருநீறு அள்ளிப் பூசிய சுருக்குடன் செக்கு மேட்டை அண்டி, மாட்டுக்குத் தண்ணீர் காட்டி, தீவனம் வைத்துப் பூட்டிவிட்டு, எடுபிடிப் பையனைக்