பக்கம்:ஆலமரத்துப் பைங்கிளி.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

63


அந்தச் சிரிப்பின் அலைகள் பயங்கரமாக ஆர்ப்பரித்தன; சிரிப்பில் அழுகை குரல் கொடுத்தது; விரக்தியின் வேதனை பரவியது; வெந்த நெஞ்சங்களின் தாபம் படர்ந்தது.

சிரிப்பு அழுகையாக மாறியது; அழுகை சிரிப்பாக மாறியது.

அழுகையும் சிரிப்பும் கலந்தது வாழ்க்கை!

ஆவிகள் இரண்டும் மறுபடி சிரிக்கத் தொடங்கி விட்டன: ஆவிகளின் நிழல் வடிவிலே நின்ற பூவிழியும் புவனநாதனும் திரும்பத் திரும்பச் சிரிப்பைக் கக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

முப்புரம் எரித்த சடாமுனியின் சிரிப்பை இவர்கள் கண்டதில்லையோ? கேட்டதில்லையோ?...

இவர்கள் ― ஆம்; பொன்னனும் பொன்னியும் மெய் விதிர்த்துப் போயினர்; அவர்களது உடல் முழுவதிலும் வியர்வைத் துளிகள் பெய்திருந்தன ― ஊசி குத்த இடம் வைக்காமல். அச்சம் ராஜாங்கம் நடத்திற்று ― அராஜக நீதியின் விளைவு போன்று. தாம் நிற்பது சாந்தி பூமியா என்ற சந்தேகம் முளைத்தெழுந்தது. தாங்கள் மண்ணில் முளைத்து விட்டமாதிரி புதியதொரு அனுபவம் கிளர்ச்சி, புரிந்தது. காதலையும் கனவையும் ஒரே மூச்சாக ― ஒரே உயிராகப் பிணைத்து இணைத்த மங்கல நாண் பொன்னியையும் பொன்னனையும் கண்டு கண்ணிர் சொரிந்தது.

அவள் நிலை கலங்கினாள்: “ஐயோ, அத்தான்!...”

அவன் விம்மிப் பொருமினான்: “ஆ! பொன்னி!”

பைங்கிளி:

ஆவியுலகத்தில் உங்களுக்கு கம்பிக்கை உண்டென்பதை நான் அறிந்துகொண்டேன்.