பக்கம்:ஆலமரத்துப் பைங்கிளி.pdf/9

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

7

'கான்டீ'னிலும் கை வைத்தார். 'காம்ப்ளிமெண்டரி டிக்கெட்' வழங்கி பெரிய மனிதர்களின் அன்புக்குப் பாத்திரமானார். அதன் பலனாக, ரகசிய உதவிகள் கிடைக்கப் பெற்றார். சட்டம் நாற்புறமும் காவல் புரிந்து கொண்டிருக்க, ஆண்டவன் ஒருருவாக உண்மையின் வடிவாகச் சிரித்து நிற்க, ஆஜானுபாகுவாக நிமிர்ந்து நின்று கொண்டிருந்த அந்தத் தியேட்டரின் ஒரு ரகசிய அறையில் அன்பர் சகடயோகம் சட்டத்தை உடைக்கும் வகையில் மதுப் புட்டிகளை உடைத்து வந்த சம்பவங்கள், அவருக்கு வேண்டப்படாதவர்களால் தூது அனுப்பப்பட்டு, அவை பிள்ளைவாளின் தன்மானம் மிக்க உணர்வுகளைச் சுண்டியிழுத்தன.......!

மெய்கண்ட பிள்ளை முகப்பில் தொங்கிய உண்மை விளக்கப் படங்களை எடுத்துக்கொண்டு வந்து, உள்ளே மானேஜர் அறையில் தொங்கவிட்டார். சகடயோகத்தைக் கூப்பிட்டனுப்பினார். அவர் வந்தார். அவருடன் கூட, அந்தச் சிறுவனும் வந்தான். அவன் அவருக்கு எடுபிடி ஆள்.

தியேட்டருக்குச் சொந்தக்காரர் அந்தப் பொடியனைப் பார்த்தார். ஆழமான பார்வை அது!

"பய யாரு?"

“தெக்குச் சீமைப் பயலுங்க. பேரு சங்கிலி. கை சுத்தம் ஜாஸ்தியுங்க, முதலாளி....!"

முதலாளியின் அந்தரங்க மேடையில் அமைந்திட்ட குற்றவாளிக் கூண்டில் தான் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த துப்பு அல்லது ரகசியம்; அல்லது உண்மையை அறிந்து கொள்ள சகடயோகத்துக்கு, வயசு போதாது!

"டேலே...!"