பக்கம்:ஆலயங்கள் சமுதாய மையங்கள்.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆலயங்கள் சமுதாய மையங்கள் 27


கொள்வதற்கு உதவுவது சமயநெறி. ஒன்றுக்கொன்று சுவை ஒவ்வாதனவாக உள்ள உணவுப் பொருள்கள் தனித்தனியே இருக்கும் வரை சுவைக்கத் தக்க சுவையும் பெறுவதில்லை! உண்ணவும் நுகரவும் இயல்வதில்லை; உடலுக்கு நலமும் தருவதில்லை. இங்ஙனம் சுவை வேறுபாடுள்ள பல்வேறு பொருள்களை ஒத்திசைந்த நிலையில் கூட்டிப் பக்குவப் படுத்தும் தொழிலுக்குச் 'சமையல்" என்று பெயர். சமைத்தல்-உணவைப் பக்குவப்படுத்தல், சமைதல் மகளிர் பருவநிலை எய்துதல். இந்தச் சொற்களின் அடிப்படையிலே சமயம் என்ற சொல் முகிழ்க்கிறது. புறக்கருவிகளாக இருக்கிற பொறிகளையும் அகக்கருவிகளாக இருக்கிற புலன்களையும் அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாச்சொல், இவற்றோடுள்ள தொடர்பிலிருந்து விலக்கி - அன்பு, நாண், ஒப்புரவு, கண்ணோட்டம், வாய்மை ஆகியவற்றோடு இயைபுபடுத்தி, உயிரை வளர்த்து உயர்த்துவதே சமயத்தின் குறிக்கோள். உயிர் வாழ்க்கை அகநிலையிலும் புறநிலையிலும் வளம் பெறச் சமயவாழ்க்கை தேவை. சமயம் சார்ந்த வாழ்க்கையே வாழ்க்கை! சமயச் சார்பில்லாத வாழ்க்கை சவலை வாழ்க்கை. “பாழுக்கிறைத்தேன் பரம்பரனைப் பணியாதே° என்றும், “பேசாத நாளெல்லாம் பிறவா நாளே” என்றும் அருளியுள்ளமை அறிக. ஆதலால், வாழ்வு முழுமைபெற, இம்மை மறுமை மட்டுமன்றி எழுமையும் அன்பும் அருளும் இன்பமும் அமையச் சமயம் தேவை.


வாழ்வியலும் வழிபாடும்

வாழ்வு, குறைவற்றதாக நிறைவுடையதாக அமைய வெண்டுமென்பதே அனைத்துயிர்களின் விருப்பம். ஆனால் நடத்துவதோ துன்பங்கலந்த வாழ்க்கை என்? முதலில் நன்று, தீது பகுத்தாராயும் திறன் வேண்டும். மானிட வாழ்வு சிறக்க, கடவுளின் துணை தேவைப்படுகிறது. “தனித்துணை” என்று