106 தி குன்றக்குடி அடிகளார்
மார்க்சியம் ஓர் உண்மை. மார்க்சியம் கற்பனையில் பிறந்த தத்துவமன்று. உலக நடை முறைகளை ஆராய்ந்து கண்ட உண்மை. மார்க்சியம் ஒரு வாழ்க்கைமுறை. மார்க்சியம் நெகிழ்ந்து கொடுக்கக்கூடிய ஒரு தத்துவம். அதாவது, மனித சமுதாயம் வாழும் காலந்தோறும் அவ்வக் காலத்தில் தேவைக்கு ஏற்றவாறு கொள்கை கோட்பாடுகளை வகுத்துக் கொள்ளுமாறு மார்க்சியம் கூறுகிறது. மார்க்சியத்தின் ஒரே குறிக்கோள் - மனித குல மேம்பாடேயாம். சிலர் கருது வதைப்போல மார்க்சியம் பொருளாயத மேம்பாடு மட்டுமே குறிக்கோளாகவுடையதல்ல.
"தத்துவ ஞான இயல், பாட்டாளி வர்க்கத்திடம் அதன் பெளதிகப் பொருளாயதப் பேராயுதத்தைக் கண்டதைப் போல, பாட்டாளி வர்க்கம் தத்துவ ஞான இயலில் தனது ஆன்மிகப் பேராயுதத்தைக் கண்டது' என்றார் மார்க்சு. பொருளாயத மேம்பாட்டின் மூலம் கலை, கலாசாரம், நாகரிகம், பண்பாடு இவற்றின் தொடர் விளைவாக மனித குலத்தில் ஏற்படும் அகநிலை, புறநிலை, அமைதி ஆகிய வற்றையும் கண்டு வளர்க்க முடியும் என்பது மார்க்சியத்தின் கொள்கை. ஆக, சைவசித்தாந்தமும் மார்க்சியமும் இருவேறு நிலையில் வளர்ந்த தத்துவங்கள். இவை இரண்டு தத்துவங் களையும் அறிஞர்கள் முயன்று ஒத்திசைவை ஏற்படுத்து வார்களாயின் மண்ணுலகம் விண்ணுலகமாகிவிடும். அல்லது சைவ சித்தாந்தச் சமயம் அயல் வழக்குகளின் கலப்புகளைத் தவிர்த்துத் தனித் தன்மையுடன் இயங்கி வெற்றி பெற்று, மக்கள் வாழ்க்கையில் நம்பிக்கையை வளர்த்து, உலகியல் வாழ்க்கையில் ஒரு துன்பக் கலப்பில்லாத இன்பச் சமுதாயத்தைச் சைவ சித்தாந்தத்தாலும் அமைக்க முடியும்.
7. மார்க்ஸ் ஏங்கெல்ஸ் நூல்கள் புத்தகம் 1 பக்கம் 391