பக்கம்:ஆலயங்கள் சமுதாய மையங்கள்.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 ❖ குன்றக்குடி அடிகளார்

இறைவனின் துணையைச் சிறப்பித்துக் கூறுவார் மாணிக்க வாசகர். ஒரு குறை, பிறிதொரு குறையை நீக்க இயலாது. கடவுள், குறைவிலா நிறைவு! கடவுள் வாலறிவு! கடவுளே நன்று, கடவுளே அன்பு, கடவுளே இன்பம்! ஆதலால் இந்த உயரிய இயல்புகளில் குறைபாடுடைய உயிர்கள், கடவுள் தன்மைகளை, நிறைநலம் பயக்கும் தன்மைகளை அடைய முயற்சி செய்தலே வாழ்க்கையின் குறிக்கோள்! நோக்கம்! இந்த உயரிய குறிக்கோளை அடைவதற்குச் சமயம் துணை செய்யும்! தனிமனிதனைச் சமயம் வளர்த்து, சமுதாய வாழ்வுடையவனாக்கி, அன்பினாற்றலும், அருளொழுக்கமும் உடையோனாக மாற்றுகிறது. இதற்குத் துணை செய்வதே வழிபாடு. கடவுள் வழிபாடு என்பது உயிர்ப்புள்ள ஒரு முயற்சி! அறிவார்ந்த ஆள்வினை! எண்ணுதல், நினைத்தல் ஆகிய அகநிலைப் பயிற்சிகள் மூலம், ஆன்மா தன்னை உயர்த்திக் கொள்வதற்குத் துணை செய்வது வழிபாடு! வழிபாடு கடவுளை முன்னிறுத்திச் செய்யப்படுவது உண்மை. ஆனால், வழிபாட்டின் பயன் கடவுளுக்கன்று. வழிபாட்டின் பயன் முழுதும் மனிதத்துக்கேயாம்.


<Boldதிருவுருவ வழிபாடு></Boldதிருவுருவ வழிபாடு>

   கடவுள் ஒரு பொருள்; அஃதோர் ஆற்றல்; வரம்பில் ஆற்றல்! கடவுள் ஓர் அறிவுப் பொருள்; வாலறிவுப் பொருள்! கடவுள் ஒர் இன்பம்; எல்லை கடந்த இன்பம்! கடவுள் ஓர் அறம், அறங்களுக்கெல்லாம் சிறந்த அறம்! கடவுள் ஒரு நீதி; நிலவும் நீதிகளுக்கெல்லாம் தலையாய நீதி. இங்ஙனம் உயர்வுற உயர்ந்துள்ள கடவுட் பொருளோடு, உயிர் ஓர் உயிர்ப்புள்ள உறவைக்கொள்ளும்போது உய்தி பெறுகிறது; உயர்கிறது; அதன் குறிக்கோளும் கைகூடுகிறது. இந்த உறவு எளிதில் கைகூடுவதன்று. கடவுளைச் சிந்திக்க வேண்டும்!