150 இ குன்றக்குடி அடிகளார்
நன்மக்கட்பேறு கிடைத்தாலும் அதனை முழுமை நலம் சான்றதாக வளர்த்துப் புகழ் கொள்ளுதல் வேண்டும். இதனை மக்களின் மேல் வைத்துத் திருவள்ளுவர்,
"மகன்தந்தைக் காற்றும் உதவி இவன்தந்தை என்னோற்றான் கொல்எனும் செல்”
என்றார். தலைமுறை வரலாற்று ஆய்வுக்குக் காலத்தால் முந்தியோர் எடுத்துக்கொள்ளப் பெறுவர். குடும்ப வளர்ச்சிக்கு அக்குடும்பத்தின் கடைசித் தோன்றல் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படுவர். முன்னோரை வைத்துக் கொள்ளும் பெருமை, தான்் ஈட்டாதது. தன்னுடைய அடுத்த தலைமுறையைக் கொண்டாடும் பெருமை தான்ே ஈட்டியது என்பதறிக. ஆதலால், வாழ்க்கை வளமாக அமைய நன்மக்கள் தேவை.
வாழ்க்கை வளமாக அமையப் பொருள் தேவை. இது வரையில் சொல்லி வந்தவை அனைத்தையும் அடையவும், இனிச் சொல்ல இருக்கும் பேறுகளை அடையவும், துணை செய்வது பொருளே. வாழ்க்கைக்குப் பொருள் இன்றி யமையாதது. பொருள் இருவகையினது. ஒன்று நேரிடையாக நுகரும் பொருள். பிறிதொன்று அணிகலனாகப் பயன்படுவது. சேம வைப்பில் வைத்திருந்து இயற்புழி எல்லாம் எடுத்துப் பயன்படுத்தக் கூடியதுமாகிய பொன், நாணயம் முதலியன. உடம்போடு கூடிய வாழ்க்கைக்கு நுகர் பொருள் இன்றியமையாதது. முறையான பலவகைச் சத்தும் உடைய நல்லுணவு நோயற்ற வாழ்க்கைக்குத் தேவை. அது மட்டுமன்று. உடல் உழைப்பின் திறனைக் கூட்டுவதற்கும் தேவை. சுவைக்காக உண்பது ஒரே வழி தான்் ஏற்புடையது. உடல் நலத்திற்கும் உடல் உழைப்புத் திறனைப் பெருக்கிக் கொள்வதற்கும் உரியவாறு தேர்ந்து உண்பதே நல்லுணவு.