164 ஜீ குன்றக்குடி அடிகளர்
லிருந்து மனித இனத்தைப் பிரித்துக்காட்டுவது நாணு டைமை என்ற ஒழுக்கமேயாம். நாணமுடையார் தம்பழி மட்டும் நாணுதல் செய்யார். பிறர் பழிக்கும் நாணுதல் செய்வார். நாணம் மேற்கொண்டதன் காரணமாகச் செய்யத் தகாதவற்றைச் செய்யாததும் செய்யத்தக்கனவற்றைச் செய்தலுமாகிய உணர்வுகள் மேலோங்குகின்றன. அழுக்காறு, அவா, வெகுளி முதலியனவும் தன் முனைப்பு, புறம் பேசுதல், பழிக்குப் பழி வாங்குதல் ஆகியனவும் நாணத்தக்கன. இத்தகைய தீய குணங்களிலிருந்தும், அவ் வழிப்பட்ட தீய செயல்களிலிருந்தும் விடுதலை பெறுதல் வாழ்க்கை என்ற கழனிக்குக் களை எடுத்தது போலாம். நானுடைமை வளமான வாழ்க்கைக்குத் துணை செய்வது.
அன்பு, செயற்பாட்டுத் தன்மையுடையது. அன்பினால் விளையும் செயற்பாடுகள் ஈதல், ஒப்புரவறிதல் முதலியன. ஈதல் முதல்நிலை, ஒப்புரவறிதல் ஈதலின் முதிர்ச்சி நிலை. வான்மழை வையகத்தை வளப்படுத்துவதுபோல, ஒப்புரவறிதல் மனித குலத்தை தழைத்து வளரச் செய்யும். ஒப்புரவறிதல் போலப் பிறிதொரு கோட்பாட்டை வானவர் உலகத்திலும் காண்பதளிது; இந்த மண்ணிலும் காண்பதரிது. தன்னோடு சார்ந்து வாழ்வாரின் நலமறிந்து அவர்தம் இயல்புகளோடு. ஒத்து நின்று ஒழுகுபவரே வாழும் இயல்பினர். ஊருணி நிறைந்த தண்ணிர் போலவும், பழுத்த பயன்மரம் போலவும், நோய் நீக்கும் மருந்து மரம் போலவும் மற்றவர்க்குப் பயன்படுதல் ஒப்புரவறிதலின் சிறந்த செயற்பாடு. மற்றவர்க்கு உளம் நிறைந்த உணர்வில் கைம்மாறு கருதாது உதவி செய்தவனே உண்மையில் வாழ்கின்றான். பிறர்க்கு உதவி செய்யும் நாளே பிறந்த நாளினும் பெரு