38 தி குன்றக்குடி அடிகளார்
"கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின் ஆற்றல் தலைப்பட் டவற்கு"
என்ற வள்ளுவம் நோக்குக! திருக்கோயில் தத்துவத்தைச் சார்ந்து, திருக்கோயில் கோட்பாட்டின்படி வாழ்கிறவர்கள், மரணத்தையும் வென்று வாழ்வார்கள்! திருக்கடவூர்த் திருக்கோயில் இறைவனைப் பூசித்து வாழ்ந்தவர் மார்க்கண் டேயர். மார்க்கண்டேயருக்கு வயது பதினாறு என்று விதி நிர்ணயித்தது. ஆனால் மார்க்கண்டேயர் தம்முடைய வழிபடும் நாயகனை நம்பிக்கையோடு இறுகப் பற்றிக் கொண்டு, தன்னை வெளவ வந்த கூற்றுவனிடமிருந்து தப்பித்து விட்டார். பெருமானும் தமக்கு அன்பு பட்ட மார்க்கண்டேயரின் உயிரை வெளவ வந்த காலனைத் தம் காலால் உதைத்து வீழ்த்தினான். "கால காலன்” என்று பெயர் பெற்றான். திருக்கோயில் நாகரிகம் மரணத்தை வென்றது; மரணத்தை வெல்லத் துணை செய்வது என்பதை அறிக.
வரலாற்று ஏடு
மனித குலத்தின் நிகழ்வு என்பது வரலாற்றை வளர்க்கும் உந்து சக்தி! இன்றைய நிகழ்வு, நாளைய வரலாறு. தமிழ் நாட்டுத் திருக்கோயில்களின் சுவர்கள் வரலாற்று ஏடுகளாக விளங்கும் மாண்பின தமிழ் நாட்டில் நிலவிய மொழி, கலை, பண்பாடு, சமூகம், அரசியல், பொருளியல், சமயம் முதலியவற்றின் வரலாற்றுச் செய்திகளைத் திருக்கோயில் கல்வெட்டுகள் மூலம் அறியமுடிகிறது. ஆகத் திருக்கோயில்கள் சென்ற கால வரலாற்றைக் கூறும் ஏடுகளாகவும் எதிர்கால வரலாற்றை இயக்கும் உந்து சக்திகளாகவும் விளங்கி வருகின்றன.