பக்கம்:ஆலயங்கள் சமுதாய மையங்கள்.pdf/5

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
முன்னுரை

மிழர் நாகரிகம் திருக்கோயில்களை மையமாகக் கொண்டது. இந்த உண்மையினைத் திருக்கோயில் கலவெட்டுகளும் திருமுறைகளும் எடுத்துக் கூறுகின்றன. புதுமை என்பது சூன்யத்திலிருந்து தோன்றுவதில்லை. முதிர்ந்த பழைமைதான் ஒரு புதுமையைப் பிரசவிக்கிறது. இதுவே வரலாற்றுண்மை. சிலர் பழைமையை மலடாக்கிப் புதுமையின் விரிவைத் தடை செய்து வருகின்றனர். இது வளரும் போக்குடைய வரலாற்றுக்கு முரண்பட்ட நிலை. பழைமையைப் புதுமையாக விரிவடையச் செய்து, ஒரு நல்ல சமுதாய அமைப்பைக் காண வேண்டும் என்ற ஆர்வத்தில் எழுந்தது இந்த நூல். இந்த நூலின் கருத்துக்கள் சார்பு நிலைகளினின்றும் விலகி விவாதிக்கும் பழக்கமுடையவர்களால் விவாதிக்கப்படுவதை வரவேற்கிறோம். மெய் கண்ட தேவர், முதல் கார்ல்மார்க்ஸ் வரை இந்நூலில் பேசப்பட்டுள்ளனர். சிந்திப்பவர்கள் இந்த நூலினை ஏற்பர் நம்புகினறோம்.

பதிப்புலகத்தில் வானதி திருநாவுக்கரசு அவர்கள் ஒரு வேந்தர். அழகுறச் செய்வது அவர்தம் இயல்பு. வானதி பதிப்பகம் இந்த நூலினை வெளியிட முன்வந்ததற்கு நன்றி! கடப்பாடு! அருமை நண்பர் வானதி திருநாவுக்கரசு அவர்களுக்கு நல்வாழ்த்துக்கள்!

குன்றக்குடி
அடிகளார் 18-9-67